சென்னை: சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது ரசிகர்களின் தேர்வாகும்.
2025/26 சீசனில் சவுதி புரோ லீக் தொடரில் அல்-நசர் அணியை கேப்டனாக ரொனால்டோ வழிநடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 40 வயதான அவர், இந்த சீசனில் 34 லீக் போட்டிகளில் விளையாடி, 15 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். இது தொடர்பாக லீக் தொடரை நடத்தும் நிர்வாகம் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.
அண்மையில் அல்-நசர் அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடும் வகையில் தனது ஒப்பந்தத்தை ரொனால்டோ நீட்டித்திருந்தார். கடந்த 2022 முதல் அல்-நசர் கிளப் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 93 கோல்களை பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 19 முறை அசிஸ்ட் செய்து உதவியுள்ளார்.
அல்-நசர் அணிக்காக இன்னும் ரொனால்டோ பட்டம் வெல்லவில்லை. இந்த சீசனில் ரொனால்டோவின் கிளப் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து அணிக்கான நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்றிருந்தார்.