பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்.
அபார வேகம், அற்புதமான ஸ்விங், பயமுறுத்தும் யார்க்கர்கள், பவுன்சர்களுக்கு பெயர் பெற்ற மிட்செல் ஸ்டார்க், டி 20 கிரிக்கெட்டில் 65 ஆட்டங்களில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆடம் ஜாம்பாவுக்குப் பிறகு (103 போட்டிகளில் 130 விக்கெட்டுகள்) சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய இரண்டாவது வெற்றிகரமான ஆஸ்திரேலிய பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மிட்செல் ஸ்டார்க்.
ஓய்வு குறித்து 35 வயதான மிட்செல் ஸ்டார்க் கூறும்போது, “ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு டி20 ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும், குறிப்பாக 2021 உலகக் கோப்பையை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு புத்துணர்ச்சியுடனும், உடற்தகுதியுடனும், சிறந்த நிலையில் இருப்பதற்கு சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். இந்த முடிவு அடுத்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கு எங்களது பந்துவீச்சு குழு தயாராகுவதற்கு நேரத்தை கொடுக்கும்” என்றார்.
அடுத்த டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மிட்செல் ஸ்டார்க், ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளார்.