ஜமைக்கா: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரான ஆந்த்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இவர், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 84 டி20, 56 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2012, 2016-ம் ஆண்டுகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் ரஸலும் இடம்பெற்றிருந்தார்.
ஓய்வு குறித்து ரஸல் கூறும்போது, “மேற்கு இந்தியத் தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். இதை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன்” என்றார்.
2 மாதங்களுக்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகளின் பிரபல வீரர் நிகோலஸ் பூரன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது ரஸல் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற டி20 லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் 20-ம் தேதி முதல் சர்வதேச டி20 தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் மட்டுமே ஆந்த்ரே ரஸல் விளையாடுவார்.
ரஸல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் மேத்யூ போர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.