ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. எப்போதுமே இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது அதன் எதிர்பார்ப்பு என்பது பலமடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டமும், அதில் நிகழ்ந்த சில நிகழ்வுகளும் எதிர்பாராத விதத்தில் புதிதாக இருந்தன.
பஹல்காம் தாக்குதலின் தாக்கம் மிக வெளிப்படையாக தெரிந்தது. இரு அணிகளின் வீரர்களும் களத்துக்கு வந்தபோது அவர்கள், பேசிக் கொள்ளவும் இல்லை, வழக்கமான கை குலுக்கலும் இல்லை. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர். தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்த பின்னர், போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் 128 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 15.5-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சிக்ஸருடன் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்தது. சிக்ஸர் விளாசி வெற்றி பெற்ற அடுத்த நொடியில் மறுமுனையில் நின்றிருந்த ஷிவம் துபேவை அழைத்துக் கொண்டு நேரடியாக இந்திய அணியின் ஓய்வு அறைக்குச் சென்றார் சூர்யகுமார் யாதவ்.
வழக்கமாக கிரிக்கெட் போட்டியில் வெற்றி உடன் எதிரணி வீரர்களுடன் கை குலுக்கிக் கொள்வது நடைமுறையாக உள்ளது. ஆனால் களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமலேயே திரும்பிச் சென்றார் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியின் பயிற்சி குழுவும் போட்டி முடிந்த பிறகு களத்துக்கு வராமல் ஓய்வறையிலேயே இருந்தனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தனது சக வீரர்களுடன் வழக்கமான கைகுலுக்கலுக்காக வரிசையில் நின்றார். மேலும் இந்திய வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பாதி தூரம் கூட நடந்து சென்றார், ஆனால் இந்திய அணி தரப்பில் இருந்து எந்த வீரர்களும் பதிலளிக்கவில்லை.
இரு அணிகளுக்கு இடையிலான இறுக்கம் டாஸ் போடும் போதே வெளிப்பட்டது. பாகிஸ்தான் டாஸ் வென்ற போது அந்த அணியின் கேப்டன் சல்மான் ஆகாவுடன், சூர்யகுமார் கை குலுக்கவில்லை. நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதையும் தவிர்த்தனர். மேலும் அணி விவரங்கள் அடங்கிய பட்டியலையும் இரு அணிகளின் கேப்டன்களும் பரஸ்பரம் மாற்றிக்கொள்வது உண்டு. இதுவும் நிகழவில்லை. மாறாக இருவரும் போட்டி ரெஃப்ரீ ஆண்டி பைக்ராஃப்டிடம் வழங்கிச் சென்றனர்.
ஒட்டுமொத்தமாக இந்திய அணி அமைதியான முறையில், பதிலடி கொடுத்தது போன்றே இந்த ஆட்டம் அமைந்தது. இது ஒருபுறம் இருக்க போட்டி நடைபெற்ற மைதான அரங்குகளில் பல்வேறு பகுதிகளில் காலி இருக்கைகள் காணப்பட்டன. 35 ஓவர்கள் நடைபெற்ற போட்டியில் இரு நாட்டு வீரர்களும் ஒருமுறை கூட இன்னொருவருடன் பேசிக்கொள்ளவும் இல்லை. வார்த்தை போர்களும், வம்பிழுக்கும் வகையில் சைகைகளும் இடம் பெறவில்லை.
போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “நாங்கள் அரசாங்கத்துடனும் பிசிசிஐயுடனும் இணைந்துள்ளோம். அணியாக நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம். அவர்களுக்கு பதில் அளித்திருக்கிறோம். இது ஒரு சிறந்த உணர்வு. நாட்டுக்கு சிறந்த முறையில் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கொடுத்துள்ளோம்.
ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையில் ஒருசில விஷயங்களை விளையாட்டு மரபைவிட முதன்மையானதாகக் கருத வேண்டும். பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். இந்த போட்டியின் வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என்றார்.
எதற்காக இந்த முடிவு? – ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்திருக்ககூடும் என கருதப்படுகிறது. இதற்கு பஹல்காம் தாக்குதலும், அதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான போட்டிக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.
இந்த முடிவுக்கு பிசிசிஐ-யும் இசைவு தெரிவித்திருக்கக்கூடும். நடப்பு தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத உள்ளன. இதைத் தொடந்து 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளன. இந்த ஆட்டங்களிலும் இந்திய அணியின் பதிலடி தொடரக்கூடும்.
எதிர்ப்புகளை மீறி விளையாடுவது ஏன்? – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் விளையாட அரசும் பிசிசிஐயும் அனுமதித்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. எதிர்ப்புகளை மீறி இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில் உள்ளார்ந்த காரணம் இருப்பது தெரியவந்துள்ளது. 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளையும் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் அகமதாபாத்தில் நடத்த இந்தியா விரும்புகிறது.
பெரிய அளவிலான போட்டிகளை நடத்த விரும்பும் நிலையில், உலகளாவிய அல்லது கண்டங்கள் அளவிலான பல நாடுகளும் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாமல் இருப்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பார்வைக்கு செல்லக்கூடும். இது ஒலிம்பிக் விளையாட்டை நடத்துவதற்கான உரிமையை பெறும் வாய்ப்பை கடுமையாக பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களிலும், ஆசிய அளவிலான போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.
‘இது ஒன்றும் புதிதல்ல’ – சர்வதேச விளையாட்டுகளில் வரலாற்று ரீதியாக, அரசியல் காரணங்களுக்காக கைகுலுக்காமல் இருப்பது புதிதல்ல. 2023-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்காவுக்கு எதிராக விளையாடிய உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் கைகுலுக்க மறுத்து விலகிச் சென்றார். தன்னுடைய நாட்டுக்கு எதிராக போர் தொடுத்து வருவதால் ரஷ்யா, பெலாரஸைச் சேர்ந்த எந்த வீராங்கனையுடனும் கைகுலுக்க மாட்டேன் என்று ஸ்விட்டோலினா தெளிவுபடுத்தியிருந்தார்.
‘விதிமுறையில் இல்லை’ – பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “விதிமுறை புத்தகத்தைப் படித்தால், எதிர் அணியுடன் கைகுலுக்குவது குறித்து எந்த விவரக்குறிப்பும் இல்லை. இது ஒரு நல்லெண்ண சைகை, ஒரு வகையான மரபு அவ்வளவுதான். விளையாட்டு துறையில் உலகளவில் பின்பற்றப்படும் சட்டம் அல்ல. கை குலுக்குவது சட்டம் இல்லையென்றால், நீண்ட காலமாக பதற்றமான உறவைக் கொண்ட ஒரு அணியுடன் கைகுலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்றார்.
பாக். கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ரெஃப்ரீயாக இருந்த ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது ஐசிசி தலையிட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வரும் மோஷின் நக்வி உள்ளார். அதேவேளையில் ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா உள்ளார்.
முன்னதாக டாஸ் போடும் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவை, இந்திய கேப்டனுடன் கைகுலுக்க வேண்டாம் என்று மேட்ச் ரெஃப்ரீ ஆன்டி பைக்ராஃப்ட் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் அணி மேலாளர் நவேத் சீமா குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு
பதிலடி கொடுக்கும் விதமாகவே போட்டி: முடிவடைந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு சல்மான் அலியை அனுப்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பரிசளிப்பு விழாவில் என்ன நிகழும்? – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கைகளுக்கு பிசிசிஐ பதிலளிக்கவில்லை. ஆனால் செப்டம்பர் 28 அன்று நடைபெறும் இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் வெற்றி பெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மோஷின் நக்வி வெற்றி கோப்பையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி வெற்றியாளராக இருந்தால் அப்போது என்ன நடைபெறும் என்பதை காண கிரிக்கெட் வட்டராங்கள் இப்போதே தயாராகிவிட்டன.