‘திடீரென எங்கிருந்து வந்தார் ஷுப்மன் கில்?’ என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். ஆம்! ஆசியக் கோப்பைக்கான டி20 தொடர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சூசகமாக முடிக்க, கம்பீரும் அகார்கரும் முடிவெடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
ஏன் சஞ்சு சாம்சன் பலிகடாவாக்கப்பட வேண்டும்? அதுவும் கில் தேர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகள் எழலாம். ஆனால், லாஜிக் அதுதான். நிச்சயம் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை. முதல் தெரிவு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா என்று அகார்க்கர் கூறிவிட்டார். கில், அபிஷேக் சர்மா தொடங்க, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் என்ற வரிசையில் நிச்சயம் சஞ்சுவுக்கு இடமில்லை.
இப்படியிருக்க, யாரைத் திருப்தி செய்ய சஞ்சு சாம்சனை அணியில் தேர்வு செய்திருக்கின்றனர் என்று முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்காகவே கில்லை வைஸ் கேப்டனாகவும் நியமித்து விட்டதால் அவரை டிராப் செய்ய முடியாது. பிறகு ஏன் சஞ்சு சாம்சன்? யாரை ஏமாற்ற இந்த வேலை என்று கிரிக்கெட் நோக்கர்களும் கடும் கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பி வருகின்றனர்.
பங்களாதேஷுக்கு எதிராக ஹைதராபாத்தில் 47 பந்துகளில் 111, டர்பனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 பந்துகளில் 107, மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜொஹான்னஸ்பர்கில் 56 பந்துகளில் 109 நாட் அவுட். இப்படி ஆடியிருப்பவரை உட்கார வைக்கலாமா என்பதுதான் கேள்வி. அதுவும் கவுதம் கம்பீர் ஒருமுறை சஞ்சு சாம்சனிடம் சொன்னாராம், ‘நீ 21 டக்குகள் அடித்தால்தான் உன்னை அணியிலிருந்து நீக்குவேன்’ என்று. சஞ்சு 21 டக்குகள் அடித்து விட்டாரா என்ற நமுட்டுச் சிரிப்புக் கேள்விதான் நமக்கு வருகிறது.
அகார்கர் சஞ்சு பற்றி கூறும்போது ஷுப்மன் கில் இல்லாததனால்தான் சஞ்சு ஆடினார் என்கிறார். ஒரு விக்கெட் கீப்பர் எப்படி ரீப்ளேஸ்மெண்ட் வீரர் அந்தஸ்தில்தான் ஆடினாரா என்ற கேள்வி எழுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சரியாக இந்தப் பாயின்டைப் பிடித்து தன் யூடியூப் சேனலில் பேசும்போது, “ஷுப்மன் கில்லை வைஸ் கேப்டனாக்கியுள்ளனர். இதில் வருத்தம் என்னவெனில் சஞ்சு சாம்சன் இடம் அச்சுறுத்தலாகியுள்ளது. சஞ்சு நிச்சயம் ஆடப்போவதில்லை. கில்தான் விளையாடுவார். அவர்தான் ஓப்பனிங் ஆடப்போகிறார்” என்றார்.
ஷுப்மன் கில்லை அனைத்து வடிவ கேப்டனாக்கும் திட்டமும், விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒரு ‘பிராண்ட்’ தேவைப்படுவதாலும் கில்லை தூக்கி விடுகின்றனர். ஒருபுறம் ‘அணிதான்… ஹீரோ கலாச்சாரம் இனி கிடையாது’ என்று கம்பீர் வீர வசனம் பேசினாலும், இன்னொரு புறம் பிராண்ட் கட்டுமானத்திற்குத் துணை போகிறார். இதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் டி20 கரியர் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளதைப் பற்றி அகார்கரோ, கம்பீரோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவும் சஞ்சு சாம்சன் கரியரை முடித்து வைக்கவே கில்லைத் தூக்கி விடுகின்றனர் என்ற தியரியை ஏற்றுக் கொள்கிறார், அவர் கூறும்போது, “இந்திய அணி மூன்று வடிவத்துக்கும் ஒரே கேப்டன் என்ற முடிவை நோக்கிச் செல்கிறது. ஆனால், ஒரு தனிப்பட்ட வீரரின் தேர்வு இன்னொரு வீரரின் இடத்தைக் கபளீகரம் செய்து விடுகிறது.
இந்த முடிவு ஷுப்மன் கில்லின் பேட்டிலிருந்து வந்தாலும் சரி அல்லது அஜித் அகார்க்கரின் பேனாவிலிருந்து வந்தாலும் சரி, சஞ்சு சாம்சனின் விதி முடிவு செய்யப்பட்டு விட்டது. அவர் லெவனில் ஆட முடியாது. திலக் வர்மா ஒன் டவுனில் வருவார். ஹர்திக், சூரியகுமார் யாதவ் இடங்களை ஒன்றும் செய்ய முடியாது. எனவே சஞ்சு பெஞ்சில் அமர வேண்டியதுதான்.
மேலும் அகார்கர் கூறும்போது சஞ்சு ஆடியதே கில் இல்லையென்ற போதுதான் என்கிறார். 3 சதங்கள் அடித்த வீரரை பதிலி வீரர் இன்னொரு வீரரின் இடத்தை இட்டு நிரப்பும் வீரர் என்று அகார்கர் கூறும்போதே தெரிகிறது, சாம்சன் கரியர் முடிவுக்கு வந்து விட்டது என்று” என ஆகாஷ் சோப்ராவும் கூறியுள்ளார்.