லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று திறக்கப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த படம் அதன் பின்னர் பெவிலியனுக்கு மாற்றப்படும். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் இதற்கு முன்னர் கபில் தேவ், பிஷன் சிங் பேடி, திலிப் வெங்சர்க்கார் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளார்.
உருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “இது மிகப்பெரிய கவுரவம். 1983-ம் ஆண்டு, இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, அதுதான் லார்ட்ஸுடனான எனது முதல் அறிமுகமாக இருந்தது. கபில்தேவ் கோப்பையை கைகளில் ஏந்தி உயர்த்துவதை பார்த்தேன்.
அந்த தருணமே எனது கிரிக்கெட் பயணத்தை தூண்டியது. இன்று, பெவிலியன் உள்ளே எனது உருவப்படம் செல்ல இருக்கிறது. கிரிக்கெட் வாழ்க்கை முழுமை பெற்றது போல் உணர்கிறேன். எனது வாழ்க்கையைப் பற்றி நான் சிந்திக்கும்போது, அது என் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கிறது. இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது” என்றார்.
லார்ட்ஸ் உருவப்படம் திட்டம் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால் எம்சிசி அருங்காட்சியகம் விக்டோரியன் காலத்திலிருந்தே கலை மற்றும் கலைப்பொருட்களை சேகரித்து வருகிறது, 1950-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்ட இந்த பிரத்யேக அருங்காட்சியகம் ஐரோப்பாவின் பழமையான விளையாட்டு அருங்காட்சியகமாக திகழ்ந்து வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரம் படங்கள் உள்ளன.