ஷுப்மன் கில்லின் அல்ட்ரா அக்ரசிவ் அணுகுமுறை தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி டைம் வேஸ்ட் செய்ததற்காக அவரைக் கரகோஷம் செய்து ஒட்டுமொத்த இந்திய அணியும் கேலி செய்ததுதான் இங்கிலாந்தை உசுப்பேற்றி விட்டு டெஸ்ட்டை வெற்றிபெறச் செய்துள்ளது என்ற விமர்சனங்களுக்கு இடையே கில் விமர்சனத்தில் இணைந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி.
ஸ்போர்ட்ஸ் பூம் என்ற ஊடகத்திற்குப் பேட்டி அளித்த மனோஜ் திவாரி, “ஷுப்மன் கில் களத்தில் கேப்டனாக நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த இங்கிலாந்து தொடரில் விராட் கோலி என்ன செய்தாரோ அதை அப்படியே ‘காப்பி’ அடிக்கப் பார்க்கிறார் ஷுப்மன் கில். இதனால் பேட்டிங்கில் கவனம் சிதறுகிறது.
நான் ஐபிஎல் தொடரிலிருந்தே பார்த்து வருகிறேன், ஷுப்மன் கில் இத்தகைய ஆக்ரோஷ அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார். நடுவர்களிடம் காரசாரமாகப் பேசுகிறார். கில் அப்படிப்பட்டவர் அல்ல, இத்தனை ஆக்ரோஷம் காட்ட வேண்டிய தேவையே இல்லை. இதனால் எதை, யாருக்காக அவர் நிரூபிக்கப் பார்க்கிறார். தேவையில்லாத ஒன்றுதான் இத்தகைய அணுகுமுறை.
ஷுப்மன் கில் தன் பாணி ஆக்ரோஷத்தைக் காட்டலாம். எனவே எப்போதும் வார்த்தை வசைகளில் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும் என்பதல்ல. டெஸ்ட் போட்டிகளை வெல்வதன் மூலமும் ஆக்ரோஷத்தை வெளிபடுத்தலாம்.
உண்மையில் இந்தியா தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்திருக்க வேண்டும். கில் காட்டும் ஆக்ரோஷம் ஆட்டத்திற்குத் தேவையற்றது. நல்லதுமல்ல. குறிப்பாக அவர் கேப்டனாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஸ்டம்ப் மைக் காலக்கட்டத்தில் பேசுவதெல்லாம் வெளிச்சத்திற்கு வருகிறது, ஷுப்மன் கில் பேசும் மொழி, வார்த்தைகள் சரியில்லை. இந்திய கிரிக்கெட் அணியை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். முந்தைய கேப்டன்கள் இதே போன்று கோபத்தை வெளிப்ப்டுத்தினார்கள் என்பதற்காக அதையே நானும் பின்பற்ற் வேண்டிய அவசியமில்லை. வட்டார வசையைப் பயன்படுத்தினால் அடுத்தத் தலைமுறை வீரர்கள் அதை அப்படியே பின்பற்றுவார்கள்.” இவ்வாறு சாடியுள்ளார் மனோஜ் திவாரி.