துபாய்: கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்த மூன்று போட்டியிலும் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்து விட்டனர். இதோடு வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற முடியாது என இந்தியா தெரிவித்தது. இந்த சூழலில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்காமல் கையோடு அவர் கொண்டு சென்றார்.
இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடிய மூன்று போட்டியின் போதும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா உடன் டாஸின் போது கைகுலுக்க மறுத்துவிட்டார். மேலும், இறுதிப் போட்டியில் இரு அணி கேப்டன்களின் போட்டோஷூட்டிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சல்மான் அலி ஆகா இது தொடர்பாக பேசியுள்ளார்.
“இந்த தொடரில் நடந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எங்களுடன் கைகுலுக்க மறுத்ததன் மூலம் அவர்கள் எங்களை அவமதிப்பதாக எண்ணம் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அவமதிப்பது கிரிக்கெட் விளையாட்டை. ஒரு சிறந்த அணி நிச்சயம் அவர்கள் செய்ததை செய்யாது.
அதே நேரத்தில் ஒரு சிறந்த அணி நாங்கள் செய்ததைதான் செய்திருக்கும். ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான் மட்டுமே போட்டோஷூட்டுக்கு சென்றேன், நாங்கள் பதக்கங்களை வாங்கிக் கொள்ளவும் களத்துக்கு சென்றோம்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு மற்றும் ரெஃப்ரி உடனான சந்திப்பின் போது அவர் (சூர்யகுமார் யாதவ்) என்னுடன் கைகுலுக்கி இருந்தார். ஆனால், அதுவே பொதுவெளியில் செய்ய மறுக்கிறார். அந்த முடிவு அவருடையது என்றால் நிச்சயம் அவர் கைகுலுக்கி இருப்பார். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர் செயல்படுகிறார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மோசின் நக்விதான், வெற்றியாளர்களுக்கு ஆசிய கோப்பையை வழங்குவார். அவரிடமிருந்து அதை அவர்கள் பெற மறுத்தால், பின்னர் எப்படி கோப்பை கிடைக்கும். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் எங்களது போட்டி கட்டணத்தை இந்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டு மக்கள் மற்றும் சிறார்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்” என சல்மான் அலி ஆகா தெரிவித்தார்.