லக்னோ: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 84 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது.
ஜேக் எட்வர்ஸ் 88 ரன்களும், கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும் எடுத்தனர். டாட் மர்பி 29, ஹென்றி தோர்ன்டன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 97.2 ஓவர்களில் 420 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டாட் மர்பி 89 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்தியா ‘ஏ’ அணி சார்பில் மானவ் சுதர் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 52.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 140 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்தார். நாராயண் ஜெகதீசன் 38, ஆயுஷ் பதோனி 21, பிரசித் கிருஷ்ணா 16, கே.எல்.ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். தேவ்தத் படிக்கல், கேப்டன் துருவ் ஜூரெல், நித்திஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், கர்னூர் பிரார் ஆகியோர் தலா 1 ரன்னில் நடையை கட்டினர்.
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி சார்பில் ஹென்றி தோர்ன்டன் 4, டாட் மர்பி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. கைவசம் 7 விக்கெட்கள் வைத்துள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 242 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது.