பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 269 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி தற்போது 484 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்கள், இங்கிலாந்து 407 ரன்கள் எடுத்தன. 180 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. நான்காம் ஆட்டத்தின் தொடக்கத்தின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் கருண் நாயர் – 26 ரன்கள் மற்றும் கே.எல்.ராகுல் – 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மதிய உணவு நேர பிரேக்கின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. பந்த் 58 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். பின்னர் ஜடேஜா உடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார் கில்.
கில் சதம்: 129 பந்துகளில் சதம் எடுத்தார் கேப்டன் கில். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இந்திய கேப்டன்களில் சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்ததாக கில் இணைந்துள்ளார். தேநீர் நேர இடைவேளையின் போது இரண்டாவது இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 484 ரன்கள் முன்னிலையை இந்த ஆட்டத்தில் பெற்றுள்ளது.
ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 9-வது வீரராக கில் இணைந்துள்ளார். இதே சாதனையை இதற்கு முன்பு இந்திய அணி தரப்பில் சுனில் கவாஸ்கர் படைத்துள்ளார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 1971-ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர் எடுத்த 344 ரன்கள் என்பது சாதனையாக இருந்தது. அதை கில் இந்த போட்டியில் கடந்துள்ளார்.