கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 81 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். கேப்டன் தெம்பா பவுமா 74 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், மேத்யூ ப்ரீட்ஸ்கே 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்களையும், பென் டூவார்ஷுயிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 297 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 96 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்களும், பென் டூவார்ஷுயிஸ் 33 ரன்களும், டிராவிஸ் ஹெட் 27 ரன்களும் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக கேசவ் மகாராஜ் தேர்வானார். 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.