லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ் அபாரமாக பந்து வீசி இருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. இன்று (செப்.2) ஒருநாள் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 24.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5.3 ஓவர்கள் வீசி, 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முல்டர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 86 ரன்களில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். பவுமா 6 ரன்னும், ஸ்டப்ஸ் ரன் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். அவர்கள் மூவரின் விக்கெட்டையும் இங்கிலாந்து வீரர் ரஷீத் கைப்பற்றி இருந்தார். இந்தப் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்தும் வாய்ப்பை அவர் மிஸ் செய்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. டெவால்ட் பிரேவிஸ் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இந்த தொடரில் தற்போது 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் அடுத்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 4-ம் தேதி நடைபெறுகிறது.