சென்னை: குரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உள்ளார் இந்திய வீரரான குகேஷ். கடந்த மாதம் கிளாசிக்கல் பிரிவில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு முறை நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷை பலவீனமான வீரர் என கார்ல்சன் விமர்சித்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரின் 6-வது சுற்றில் 19 வயது வீரரான குகேஷ், கார்ல்சனை வீழ்த்தினார். கடந்த மாதம் நார்வே நாட்டில் கிளாசிக்கல் முறையில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார். அந்த தோல்விக்கு பிறகு விரக்தியில் மேசையை ஓங்கி தட்டி இருந்தார் கார்ல்சன். சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் தற்போது குகேஷ் முன்னிலை வகிக்கிறார்.
“உண்மையாகவே எனக்கு இப்போது செஸ் விளையாட பிடிக்கவில்லை. எனது ஆட்டத்தில் ஃப்ளோ இல்லாதது போல உணர்கிறேன். இப்போது அது மிகவும் மோசமாக உள்ளது. இந்த பார்மெட்டில் குகேஷ் சிறப்பாக விளையாடுகிறார். 5 தொடர் வெற்றிகளை இதில் அவர் பதிவு செய்துள்ளார். அது அபாரமானது. குகேஷ் இந்த ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அவர் சிறப்பாக விளையாடுகிறார். இந்த தொடரில் நான் மிகவும் மோசமாக விளையாடி உள்ளேன்” என கார்ல்சன் தெரிவித்தார்.