மான்செஸ்டரில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வரும் இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இந்தத் தொடரில் தன் 4-வது சதத்தை எட்டியதுதான் ஒரே ஆறுதல். கில் சதம் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் தாழ்வான ஷூட்டர் பந்தில் எல்.பி. ஆனார்.
238 பந்துகளைச் சந்தித்த ஷுப்மன் கில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களை எடுத்து ஆர்ச்சர் வீசிய வெளியே செல்லும் பந்தை நோண்டி எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். பொதுவாக இத்தகைய பந்துகளை பேக்ஃபுட் பஞ்ச்தான் ஆடுவார். ஆனால் கணிக்க முடியாத பவுன்ஸ் கொண்ட இந்தப் பிட்சில் ஒரு பந்து குட் லெந்த்திலிருந்து பென் ஸ்டோக்ஸ் எழுப்ப கையில் பலத்த அடி வாங்கினார் கில்.
இதனையடுத்து அவரால் பேக்ஃபுட் பஞ்ச் போன்ற ஷாட்களையோ புல் ஷாட்களையோ ஆடுவதில் சிரமம் ஏற்பட்டது. கடைசியில் ஆட்டமிழ்ந்தார். ஆர்ச்சர் போட்டு எடுக்கவில்லை, கில் தானாகவே அவருக்கு விக்கெட்டைக் கொடுத்தார் என்றுதான் கூற வேண்டும், ஆடாமல் விட வேண்டிய பந்து, அவர் உள்ளே வரும் பந்து என்று அதற்குத் தயாரானதால் கடைசி நேரத்தில் வெளியே போன பந்தை ஏன் தொட்டார் என்று புரியவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 9-வது சதத்தை எடுத்த ஷுப்மன் கில் இந்தத் தொடரில் பிரமாதமான ஃபார்மில் சிலபல சாதனைகளை உடைத்துள்ளார். பெரிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 1947- 48 தொடரில் டான் பிராட்மேன் கேப்டனாக இந்திய அணிக்கு எதிராக 4 சதங்களை எடுத்தார். சுனில் கவாஸ்கர் 1978-79 மே.இ.தீவுகள் அணி இங்கு காளிச்சரன் தலைமையில் வந்தபோது அந்தத் தொடரில் 4 சதங்களை கேப்டனாக அடித்தார். ஆனால், ஷுப்மன் கில் வெளிநாட்டுத் தொடரில் 4 சதங்களை ஒரே தொடரில் அடித்து ஒரு படி மேலே நிற்கிறார்.
அதேபோல் கேப்டனாக இந்தத் தொடரில் இதுவரை 722 ரன்களை எடுத்துள்ள ஷுப்மன் கில் இன்னும் ஒரு டெஸ்ட் மீதமுள்ள நிலையில் டான் பிராட்மேனின் 810 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே தொடரில் அதிக சதங்களை எடுத்த வரிசையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கர் பட்டியலிலும் கில் இணைந்தார். 1971 தொடரில் கவாஸ்கர் 774 ரன்களை தன் அறிமுகத் தொடரில் எடுத்தபோது 4 சதங்களை எடுத்திருந்தார். 2014-15 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 4 சதங்களை எடுத்தார்.
அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே தொடரில் அதிக ரன்களை எடுத்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 712 ரன்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ஷுப்மன் கில். கோலி கேப்டனாக 2016-ல் இந்தியாவில் நடந்த தொடரில் 655 ரன்களை எடுத்தார். அதனை ஷுப்மன் கில் இப்போது கடந்து சென்றுள்ளார். ஆனால் இது வெளிநாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வடிவங்களிலும் இந்த ஆண்டு 1,200 ரன்களை எடுத்துள்ளார் கில். இந்த ஆண்டில் மட்டும் 6 சதங்களை இதுவரை எடுத்துள்ளார் கில்.