மும்பை: 2-வது முறையாக இந்தியா வந்துள்ளார் மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட். இந்நிலையில், களத்தில் கடினமாக உழைக்க தனக்கு உத்வேகம் அளித்தது கிரிக்கெட் வீரர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
“சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்” என மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் போல்ட் தெரிவித்தார்.
ஜமைக்காவில் இருந்து மைக்கேல் ஹோல்டிங், வால்ஷ், கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஜமைக்காவை சேர்ந்தவர்தான் போல்ட்.