துபாய்: நடப்பு ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “இந்திய அணி உடனான இறுதிப் போட்டியில் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இது மாதிரியான அழுத்தம் நிறைந்த போட்டிகளில் இதுவே மிகவும் முக்கியம் என கருதுகிறேன். சரிவில் இருந்து மீண்டு வந்து பெறுகின்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை தரும். கடந்த சில மாதங்களாக நாங்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த அணிக்கு அந்த திறன் உள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதை பெருமையாக உணர்கின்றனர்.
வங்கதேச அணி உடனான ஆட்டத்தில் 33 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு என்ற நிலையில் இருந்து இந்த அணி வெற்றியை வசப்படுத்தி உள்ளது. எங்கள் அணி பேட்டிங்கில் மேம்பட வேண்டி உள்ளது. குறிப்பாக டாப் ஆர்டரில் இருந்து கூடுதல் பங்களிப்பு தேவைப்படுகிறது. வங்கதேச அணி உடனான ‘சூப்பர் 4’ ஆட்டத்தில் அதிரடி ஷாட் ஆட முயன்று விக்கெட்டை இழந்தோம் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தத் தொடரில் இந்திய அணியுடன் லீக் சுற்றில் எங்கள் அணி விளையாடியதற்கும், சூப்பர் 4 சுற்றில் விளையாடியதற்கும் வித்தியாசம் இருந்தது. முதல் போட்டியை காட்டிலும் இரண்டாவது முறையில் எங்கள் ஆட்டம் மேம்பட்டிருந்தது. முதல் போட்டியில் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை இந்தியா கொண்டிருந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் அந்த நிலை இல்லை. அபார இன்னிங்ஸ் ஆடி அபிஷேக் சர்மா ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்தார். இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி உடனான மூன்றாவது ஆட்டத்தில் விளையாடுகிறோம். இறுதிப் போட்டியில் விளையாடும் இந்த வாய்ப்புக்கு நாங்கள் தகுதியானவர்கள். இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இதுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என ஹெசன் தெரிவித்துள்ளார்.