கிரிக்கெட்டில் ஃபோர்பீச்சர் என்ற சட்டம் ஒன்று உள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட போட்டியை விளையாட விருப்பம் இல்லையென்றால் அந்த அணியின் கேப்டன் அந்த போட்டியை ஃபோர்பிட் செய்ய முடியும். அதாவது ஒரு போட்டியின் இன்னிங்ஸை விளையாடாமல் விலக முடியும்.
ஆனால் ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் இதை செய்தால் அந்த போட்டியில் இருந்து விலகுவதற்கு சமம். அதாவது அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. கிரிக்கெட் வரலாற்றில் இது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. சரியான காரணம் இல்லாமல் இந்த முடிவை எடுத்தால் போட்டியை ஏற்பாடு செய்யும் வாரியத்தை அவமதிப்பது போன்று ஆகிவிடும். மேலும் சர்வதேச அரங்கில் அந்த அணியின் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படும்.
முதன் முறையாக ஃபோர்பிட் நிகழ்வு 1978-ல் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது அரங்கேறியது. இந்திய அணி பேட்டிங் செய்த போது ஒரே ஓவரில் பாகிஸ்தான் அணி 4 பவுன்ஸர்களை வீசியது. ஆனால் அதற்கு களநடுவர் வைடு கொடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் பிஷன் சிங் பேடி களத்தில் இருந்த 2 பேட்ஸ்மேன்களையும் வெளியே அழைத்து ஆட்டத்தை ஃபோர்பிட் செய்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியை ஃபோர்பிட் செய்த முதல் கேப்டன் பிஷன் சிங் பேடிதான். இதையடுத்து 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் கொழும்பு நகரில் இலங்கைக்கு எதிராக நடைபெற இருந்த ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள் மறுத்தன.
இந்த விவகாரத்தில் இரு அணிகளுக்கும் ஐசிசி தண்டனை அறிவித்தது. இதனால் இந்த இரு ஆட்டங்களும் ஃபோர்பிட் செய்யப்பட்டதாக அறிவித்து இலங்கை அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2006-ம் ஆண்டு இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் ஃபோர்பிட் நிகழ்ந்தது. 4-வது நாள் ஆட்டத்தின் போது நடுவர்கள் பந்தை ஆய்வு செய்த போது பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதனால் வேறு பந்தை மாற்ற வேண்டும் என நடுவர்கள் கூறினர். ஆனால் இதை பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஏற்றுக்கொள்ளவில்லை. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சக அணி வீரர்களை அழைத்துக் கொண்டு இன்சமாம் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதன் பின்னர் அவர்கள், களத்துக்கு திரும்பவில்லை. இதனால் இந்த போட்டி ஃபோர்பிட் செய்யப்பட்டதாகவும் இங்கிலாந்து அணி வெற்றியாளர் எனவும் அறிவிக்கப்பட்டது.
2000-ம் ஆண்டு செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர் மழை காரணமாக அடுத்த 3 நாட்களும் ஆட்டம் நடைபெறவில்லை.
இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோனி, இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது எப்படியும் போட்டி டிராவில்தான் முடிவடைய போகிறது. ஆனால் நாம் நினைத்தால் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸை ஃபோர்பிட் செய்தால் முடிவை எட்டலாம் என யோசனை கூறினார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை 248 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.
அப்போது இருந்த விதிமுறைகளின்படி பேட்டிங் செய்யாமல் ஃபோர்பிட் செய்ய முடியாது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை 0/0 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸை ஃபோர்பிட் செய்தது. இதையடுத்து 249 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 75.1 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.