அட்லான்டா: கிளப்களுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அட்லான்டாவில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் லயோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.
இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தரப்பில் ஜோவோ நெவ்ஸ் இரு கோல்களும் (6 மற்றும் 39-வது நிமிடம்), டோமஸ் அவிலெஸ் (சுய கோல், 44-வது நிமிடம்), அக்ரஃப் ஹக்கிமி (45+3-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
லயோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி கிளப்புக்கு மாறுவதற்கு முன்னர் பிஎஸ்ஜி அணியில் இரண்டு சீசன்கள் விளையாடி இருந்தார். இதனால் அந்த அணிக்கு எதிரான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த போட்டியை காண மைதானத்தில் 65,574 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
மெஸ்ஸிக்கு இரு முறை கோல் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 63-வது நிமிடத்தில் அவர், இலக்கை நோக்கி அடித்த பந்தை பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் கியான்லூய்கி டோனாரும்மா எளிதாக தடுத்தார்.
தொடர்ந்து 70-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் கியான்லூய்கி டோனாரும்மா அபாரமாக டைவ் அடித்து கோல் விழவிடாமல் தடுத்தார்.