லண்டன்: இந்திய அணி உடன் நாளை ஓவல் மைதானத்தில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை இந்த தொடரின் கடைசி போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும்.
இந்த சூழலில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு மாற்றாக அணியின் துணை கேப்டனான ஆலி போப் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
“தொடரை நிறைவு செய்ய முடியாதது ஏமாற்றம் தருகிறது. எனது தோள்பட்டையில் உள்ள தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவது குறித்து ஆலோசித்தோம். ஸ்கேன் பரிசோதனைகள் வந்த பிறகு என்னால் பந்து வீச முடியாது என தெரிந்தது. அதன் பின்னர் போட்டியில் இருந்து விலகும் முடிவை அணியின் பயிற்சியாளர் உடன் சேர்ந்து எடுத்தேன்” என ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
ஓவல் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்: ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்.