புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை பெறும் ஏலத்துக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த அனுமதியை வழங்கி உள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு வழங்கும்.
காமன்வெல்த் விளையாட்டு இயக்குநர் டேரன் ஹால் சமீபத்தில் அகமதாபாத்தில் ஆய்து மேற்கு குஜராத் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் பெரிய குழு ஒன்று அகமதாபாத் நகரத்தில் ஆய்வு செய்ய உள்ளது.
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெறும் ஏலத்தில் இருந்து கனடா விலகி உள்ளது. இதனால் இந்த போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கடைசியாக இந்தியா கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியிருந்தது.
வரும் நவம்பர் கடைசி வாரத்தில் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்கூட்டத்தில், 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது என்பது முடிவு செய்யப்பட உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வகையில் வரும் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது.