அகமதாபாத்: இந்தியாவின் மீராபாய் சானு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். திங்கட்கிழமை அன்று அகமதாபாத் நகரில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தம் 193 கிலோ பளுவை தூக்கி இருந்தார். காயம் உள்ளிட்ட காரணத்தால் 31 வயதான அவர் சுமார் ஓராண்டுக்கு பிறகு களம் கண்டு, இந்த பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஸ்னாட்ச் முயற்சியில் 84 கிலோ பளுவை முதல் இரண்டு முறை தூக்கி இருந்தார். மூன்றாவது முயற்சியில் 89 கிலோ பளுவை தூக்க தவறினார். க்ளீன் அண்ட் ஜெர்க் முயற்சியில் 105, 109 மற்றும் 113 கிலோ எடையை தூக்கினார். இதில் மூன்றாவது முயற்சியை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.
மலேசியாவை சேர்ந்த ஐரீன் ஹென்றி வெள்ளியும், வேல்ஸை சேர்ந்த நிக்கோல் ராபர்ட்ஸ் வெண்கலமும் வென்றிருந்தார். 48 கிலோ எடைப்பிரிவில் இதற்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 2 காமன்வெல்த் பதக்கமும் வென்றிருந்தார் குறிப்பிடத்தக்கது.