சென்னை: இந்திய அணியில் கருண் நாயருக்கு மாற்றாக நம்பிக்கை தரும் இளம் வீரர் சாய் சுதர்ஷனை ஆட வைக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் இந்த தொடரில் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி, ரன் சேர்க்க தவறிய கருண் நாயருக்கு மாற்றாக சாய் சுதர்ஷனை விளையாட வைக்கலாம் என தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்.
8 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு கருண் நாயர் இந்திய அணியில் இந்த தொடரில் இடம்பிடித்தார். இந்த தொடரில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 131 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சாய் சுதர்ஷன் இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.
“பேட்டிங் ஆர்டரில் மூன்றாம் இடத்தில் ஆடும் வீரரை நான் பார்க்கிறேன். அங்கு இன்னும் கருண் நாயரை தொடர்ந்து விளையாட செய்கிறோமோ அல்லது இளம் வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தருகிறோமோ என்பது எனது கேள்வி. கடைசியாக அவர் விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸில் அவரது ஆட்டம் ஆறுதல் தந்தது.
அவர் இளம் வீரர். எதிர்காலத்துக்கான நம்பிக்கை. கருண் நாயருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. வாய்ப்புகள் என்பதை விட களத்தில் அவர் எப்படி செயல்பட்டார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதுதான் என்னை மாற்றி சிந்திக்க வைக்கிறது. இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்லும் வாய்ப்புள்ளது” என தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்.