லண்டன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘ஓவல்’ மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் லீ ஃபோர்டிஸ் இடையே செவ்வாய்க்கிழமை அன்று வாக்குவாதம் ஏற்பட்டது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி வரும் வியாழக்கிழமை அன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி உள்ளது. தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனது. லார்ட்ஸ் போட்டியில் இந்தியா 22 ரன்களில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
ஓவல் மைதானத்தின் மையப்பகுதியில் உள்ள ஆடுகளத்தை கம்பீர் தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளர் குழு ஆய்வு மேற்கொண்ட போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான குழு ஆடுகளத்தை ஆய்வு செய்திருந்தனர்.
சம்பவத்தின் போது கவுதம் கம்பீர் உடன் இருந்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடாக் தெரிவித்தது. “நாங்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அப்போது பிட்ச் கியூரேட்டர் லீ ஃபோர்டிஸ் பிட்சிலிருந்து 2.5 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ரப்பர் ஸ்பைக் கொண்ட ஷுக்களை தான் அணிந்திருந்தோம். அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதே நேரத்தில் எங்கள் அணியின் சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஐஸ் பாக்ஸ் உடன் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் ஸ்கொயர் திசைக்கு செல்ல வேண்டாம் என அவர் கூச்சலிட்டார். அதை கவனித்த தலைமை பயிற்சியாளர் கம்பீர், அவர்களுக்கு ஆதரவாக பிட்ச் கியூரேட்டர் உடன் பேசினார்” என சிதான்ஷு கோடாக் தெரிவித்தார்.
கம்பீர் vs பிட்ச் கியூரேட்டர்: “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது; நீங்கள் பிட்ச் பராமரிப்பாளர். அவ்வளவு தான். அதற்கு மேல் எதுவும் இல்லை” என கம்பீர் கூறியுள்ளார். இருவரும் காரசார விவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய ஊடக நிறுவனங்கள் ‘என்ன நடந்தது?’ என லீ ஃபோர்டிஸ் வசம் கேள்வி எழுப்பி இருந்தனர். “நான் கம்பீரை இதற்கு முன்பு சந்தித்தது கிடையாது. இன்று காலை என்ன நடந்தது என்று பார்த்து இருப்பீர்கள். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்தப் போட்டி தொடரின் முக்கிய போட்டியாக அமைந்துள்ளது. இது பெரிய ஆட்டம். அவருடன் மகிழ்ச்சியாக இருப்பது என் வேலை இல்லை” என தெரிவித்தார்.