லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சற்று அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். களநடுவர் முதலில் அவுட் கொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்தது. இதில் பந்து ஸ்டெம்புகளை தாக்குவது தெரியவந்ததை தொடர்ந்து ஜெய்ஸ்வால் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன், கே.எல்.ராகுலுடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். கே.எல்.ராகுல் 40 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். கிறிஸ் வோக்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே கூடுதல் பவுன்ஸுடன் வீசிய பந்தை கே.எல்.ராகுல் கட் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது.
38 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார். இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மதிய உணவு இடைவேளை வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் நிலவியது.
அப்போது ஷுப்மன் கில் 15, சாய் சுதர்சன் 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மைதானத்தில் உள்ள ஈரதப்பதம் உலர்த்தப்பட்டு சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஷுப்மன் கில் 35 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
கஸ் அட்கின்சன் பந்தில் தடுப்பாட்டம் மேற்கொண்ட ஷுப்மன் கில் ரன் ஓட முயற்சி செய்தார். ஆடுகளத்தின் மையப்பகுதிக்கு அவர், வந்த நிலையில் எதிர்முனையில் இருந்த சாய் சுதர்சன் ஓட வேண்டாம் என பின் வாங்கினார். அப்போது ஷுப்மன் கில் திரும்பி கிரீஸ் பகுதிக்குள் செல்வதற்குள் கஸ் அட்கின்சன் பந்தை விரைவாக எடுத்து ஸ்டெம்பை தகர்த்தார்.
இந்த ரன் அவுட்டை ஓய்வறையில் இருந்து பார்த்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரக்தியடைந்தார். இதையடுத்து கருண் நாயர் களமிறங்கினார். இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது சாய் சுதர்சன் 84 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், கருண் நாயர் 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
பின்னர் சாய் சுதர்சன் 108 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஜாஷ் டங் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவையும் 9 ரன்களில் டங் வெளியேற்றினார். இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற துருவ் ஜூரெல் 19 ரன்களில் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. கருண் நாயர் 52 ரன்கள் உடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.
கவாஸ்கர் சாதனை முறியடிப்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக அவர், 11 ரன்களை எடுத்திருந்த போது டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டனாக1978-79-ம் ஆண்டு மேற்கு இந்தி
யத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் குவித்திருந்தார். இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். நடப்பு இங்கிலாந்து தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 743 ரன்கள் குவித்துள்ளார்.
5-வது முறையாக டாஸில் தோல்வி: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று லண்டனில் தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டாஸில் தோல்வி அடைந்தார். இந்த தொடர் முழுவதுமே ஷுப்மன் கில் டாஸில் வெற்றி பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு அணி அனைத்து ஆட்டங்களிலும் டாஸை இழப்பது இது 14-வது முறையாகும். இதில் 13 தொடர்களில் 3 தொடர்கள் டிராவில் முடிவடைந்திருந்தன. 1953-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அனைத்து ஆட்டங்களிலும் டாஸை இழந்த போதிலும் தொடரை வென்று அசத்தியிருந்தது.