சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் அணியில் சேர்க்கப்பட்ட அன்ஷுல் காம்போஜ், பாஸ்பால் இங்கிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமாகி முதல் டெஸ்ட்டிலேயே சரியான பாடம் கற்று கொண்டார். 18 ஓவர்களில் 89 ரன்களைக் கொடுத்து பென் டக்கெட் தூக்கிக் கொடுத்த ஒரே விக்கெட்டுடன் முடிந்தார். சரி இத்துடன் அவர் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது என்றுதான் அப்போது பலரும் கருதினர். ஆனால் மீண்டு எழுவேன் என்று அவர் கடும் முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரின் புகழ்பெற்ற சதங்களுடன் டிரா செய்ய முடிந்ததால்தான், கடைசி ஓவல் டெஸ்ட்டை வென்று தொடரை இந்திய அணி சமன் செய்ய முடிந்தது இப்போது இந்திய கிரிக்கெட் கதை வரலாற்றில் ஒரு தேவதைக் கதை போல் பிரபலடைந்துள்ளது.
இப்போது பெங்களூருவில் தெற்கு மண்டலத்திற்கு எதிராக வீசிய காம்போஜ் 24 ஓவர்கள் 3 மெய்டன்களுடன் 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்து வீச்சில் நல்ல கட்டுப்பாடு இருந்தது. பதற்றம் இல்லாத ரன் அப் இருந்ததாக என்சிஏ கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அன்ஷுல் காம்போஜ் ஓல்ட் டிராபர்ட் கடினமான துவக்கத்திற்குப் பிறகே, “நான் ரிதமுக்கு வருவதற்காக முயன்று வருகிறேன். இப்போதைக்கு என் முன்னால் என்ன உள்ளதோ அதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். டெஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகே துலீப் டிராபியில்தான் ஆடுகிறேன். பவுலிங் வீசும் போது நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் ரிதமில் உள்ளதாகவும் உணர்ந்தேன்.
சுமார் ஒருமாதம் எதுவும் ஆடவில்லை. இடைப்பட்ட காலத்தில் பந்துவீச்சின் அடிப்படை நுணுக்கங்களை மேம்படுத்திக் கொண்டேன். எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்காமல் இப்போது கண் முன்னால் என்ன தெரிகிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன்.
ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு, சீசன் இல்லாத நேரத்தில் உடல் தகுதியை ஏற்றிக் கொள்வது வரவிருக்கும் நீண்ட சீசனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சீசன் நடந்து கொண்டிருக்கும் போது அதிகம் பயிற்சியில் ஈடுபட முடியாது. நம்மை பராமரிக்க மட்டுமே முடியும். ஆஃப் சீசனில் உடல்தகுதியை ஏற்றிக் கொண்டால் ஆட்டத்திறனை நீட்டித்துக் கொள்ள உதவும்..
ஆட்டம் நடைபெறும் போது திறன்களை வளர்க்க மட்டுமே கவனம் செலுத்த முடியும். பயிற்சி உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்த முடியாது. இதில் முக்கியமானது என்னவெனில் துவண்டு விடாமல் பயிற்சியில் இருக்க வேண்டும். நீண்ட ஓய்வு கூடாது.
பயிற்சி செய்யும் போது நேரடி ஆட்டத்தின் சூழ்நிலைகளை மனதில் கொண்டால் அழுத்தத்தை உணர்ந்து அதற்கும் தயாராகி விடலாம். இந்த அழுத்தத்தை நாம் நேரடி போட்டியில் சுலபமாகக் கடந்து விடலாம். கொஞ்சம் கூடுதலாக முயற்சிகளை இட வேண்டும். கடினம் தான், ஆனால் அப்படித்தான் நாம் நம் பந்து வீச்சை மீட்டெடுக்க முடியும். இந்த வகையில்தான் நீண்ட கால பலன்களை அடைய முடியும்.” என்று விடா முயற்சியுடன் காம்போஜ் மீண்டும் இந்திய அணித் தேர்வை எதிர்நோக்குகிறார்.