மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை!
32 வயதை நெருங்கும் ஷுபம் ஷியாம்சுந்தர் சர்மா என்னும் இந்த அதிசய வீரர் மத்தியப் பிரதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ரெகுலராக ஆடாதவர். 67 முதல் தரப் போட்டிகளில் இதுவரை 4,301 ரன்களை 43.44 என்ற சராசரியில் 12 சதங்கள் 23 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 240. 44 லிஸ்ட் ஏ போட்டிகளில் 1477 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 108. 2 சதம், 11 அரைசதம். வெறும் 17 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 290 ரன்களை எடுத்துள்ளார்.
தன் வலது கை ஆஃப் பிரேக் பவுலிங் மூலம் சிவப்புப் பந்தில் 28 விக்கெட்டுகளை அதுவும் ஒருமுறை 5/59 என்றும் அசத்தி எடுத்துள்ளார். லிஸ்ட் ஏவிலும் 23 விக்கெட்டுகளை எடுத்த ஷுபம் சர்மா அதில் ஒரு முறை 4/21 என்று அசத்தியுள்ளார். இவர் கடைசியாக டி20 விளையாடியது 2023ம் ஆண்டு. இவர் ஆட்டத்தைப் பார்த்த வர்ணனையாளர்கள் சிலர் இவரது ஆட்ட முறையை வாசிம் ஜாஃபருடன் ஒப்பிடுகின்றனர்.
12 ஆண்டுகளாக மத்தியப் பிரதேச அணிக்கு ஆடி வருகிறார். ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு ஷுபம் சர்மா கேப்டனாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இவருக்கு இந்தியா யு-19 அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமே. ஒருமுறை 2012-ல் யு-19 உலகக்கோப்பை உத்தேச அணியில் தேர்வானார். இறுதி அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அந்த உலகக்கோப்பையை இந்திய யு-19 அணி உன்முக்த் சந்த் தலைமையில் வென்றது. உன்முக்த் சந்த் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
12 ஆண்டுகாலம் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் உழன்று வரும் ஷுபம் சர்மா இந்தியா ஏ அணியில் கூட இடம்பெற்றதில்லை. இவரது சகாக்களான ரஜத் படிதார், குல்தீப் சென், வெங்கடேஷ் அய்யர், ஆவேஷ் கான் போன்றோர் இந்திய அணித் தொப்பியை அணிந்து ஆடினர். ஆனால் தனக்கு உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சாதிப்பதே பிடித்திருக்கிறது என்கிறார் இந்த அதிசயப்பிறவி.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையத்திற்கு அவர் இது தொடர்பாகக் கூறும்போது, “இத்தனை நீண்ட காலம் ஆடியது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இன்னும் சாதிக்கவே விரும்புகிறேன்” என்றார்.
2021-22 உள்நாட்டுத் தொடரிலிருந்தே பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுபம் சர்மா, வெளியுலக வெளிச்சத்திற்கு வரவேயில்லை. அனைத்து டாப் உள்நாட்டுத்தொடர்களிலும் சேர்த்து அந்த சீசனில் 2849 ரன்களைக் குவித்தார். இதே காலக்கட்டத்தில் இவர் எடுத்த 9 சதங்கள் 52.75 சராசரி இவரது பேட்டிங் தன்மையை நமக்கு உணர்த்தும். சமீபத்தில் நடைபெற்று வரும் துலீப் கோப்பை வடகிழக்கு மண்டல அணிக்கு எதிராக 2வது இன்னிங்சில் 122 ரன்களை 215 பந்துகளில் எடுத்துள்ளார்.
2021-22-ல் மத்தியப் பிரதேசம் தன் ரஞ்சி கோப்பை வெற்றிப்பாதையில் சென்ற போது ஷுபம் சர்மா 6 போட்டிகளில் 608 ரன்களை எடுத்தார். மும்பைக்கு எதிராக இறுதிப் போட்டியில் எடுத்த சதம் உட்பட 4 சதங்கள் இதில் அடங்கும்.
இவர் யார் கைவண்ணத்தில் வளர்ந்தார் என்பதுதான் மிக முக்கியம். வேறு யார்? லெஜண்ட் ராகுல் திராவிட் தான். “தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் திராவிட் சார் யு-16 செஷன் ஒன்றை எங்களுக்காக எடுத்தார். அப்போது அவரிடம் நிறைய சந்தேகங்களைக் கேட்டேன், அவர் அப்போது கூறிய டிப்ஸ்கள் இப்போதும் எனக்கு உதவிகரமாக உள்ளன. போட்டிகளுக்கு எப்படி தயார் செய்து கொள்வது என்பதை சொல்லிக் கொடுத்தார். அவையெல்லாம் பொக்கிஷங்கள்.” என்கிறார்.
டி20 கிரிக்கெட்டின் பணமழை மற்றும் பெயர், புகழ்ச்சி என்று இளம் வீரர்கள் ஓடும் காலக்கட்டத்தில் உள்நாட்டுக் கிரிக்கெட்டே போதும் அதுவும் சிவப்புப் பந்து கிரிக்கெட்டே போதும் என்று கூறும் அதிசயப்பிறவி இனி உருவாவது கடினம்தான்.