குவாஹாட்டி: 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.
12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இந்தியாவில் 4 நகரங்களிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.123 கோடியாகும். 47 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாத ஏக்கத்துக்கு இம்முறை இந்திய அணி தீர்வுகாண முயற்சிக்கக்கூடும்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்லின் தியோல், தீப்தி சர்மா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். பந்துவீச்சில் அமன்ஜோத் கவுர், ரேணுகா சிங், கிரந்தி கவுடு, ராதா யாதவ், ஸ்நே ராணா ஆகியோர் இலங்கை அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.