விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் மைதானத்தில் ஒரு போட்டியில் ஆடிவிட்டு ஓய்வு பெறாமல் அப்படியே ஓய்வு அறிவித்து வெள்ளைச் சீருடையைக் கழற்றியது பலருக்கும் வருத்தமே. ஆனால் ஹர்பஜன் சிங்கின் மகள் ஹினயா, தன் ஆதங்கத்தை கோலியிடமே கேட்டு விட்டாள். இது விராட் கோலிக்கு மட்டற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் எடுத்து 10,000 கனவு ரன்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் ஓய்வு பெற்று விட்டார். விராட் கோலி ஓய்வு பெற்ற பின் ஹர்பஜன் சிங் ‘ஏன் விராட் ஏன்?’ என்று ட்வீட் செய்தார். மேலும் தன் மகள் ஹினயாவும் தன்னிடம், ‘அப்பா ஏன் விராட் ஓய்வு பெற்றார்?’ என்று கேட்டதாக இன்ஸ்டண்ட் பாலிவுட்டில் தெரிவித்தார்.
மேலும் ஹினயா, விராட் கோலியிடமே மெசேஜ் செய்து ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டதையும் பகிர்ந்து கொண்டார் ஹர்பஜன் சிங். அதாவது விராட்டிற்கு தன் மெசேஜில் ஹினயா, “நான் ஹினயா, விராட் ஏன் ஓய்வு பெற்று விட்டீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த விராட் கோலி, ‘நேரம் வந்து விட்டது மகளே’ என்று பதில் அளித்துள்ளார். ஹர்பஜன் சிங் மகள் தனக்கு மெசேஜ் செய்து விசாரித்ததில் விராட் கோலி மட்டற்ற மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
மிக நீண்ட காலம் வரையில் மூன்று வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருந்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த விராட் கோலி, கடைசியில் டெஸ்ட் ஃபார்மில் சரிவு காண சராசரி 46.85 என்று சரிவு கண்டது. 30 சதங்களும் 31 அரைசதங்களும் இவரது டெஸ்ட் கன்வர்ஷன் ரேட்டின் துரித கதியைப் பறைசாற்றுகிறது.
2011-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமானார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் 2014-ல் அடிலெய்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசினார், அதுவும் 2வது இன்னிங்ஸ் சதம் என்பது மைக்கேல் கிளார்க் விடுத்த 350+ இலக்கு சவாலை எதிர்த்து கிளார்க்கிற்கும் ஆஸி. வீரர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்க வைத்த இன்னிங்ஸ், துரதிர்ஷ்டவசமாக குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது, ஆனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதிய ஆக்ரோஷ, வெற்றியை நோக்கி எந்த வித சமரசமும் செய்து கொள்ளாத கேப்டன் இந்திய அணிக்குக் கிடைத்தார்.
68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்த விராட் கோலி 40 டெஸ்ட்களில் வென்று நம்பர் 1 டெஸ்ட் கேப்டனாகத் திகழ்ந்தார். ஐபிஎல் தொடர்களிலும் விராட் கோலி ஒரு அசைக்க முடியா, வீழ்த்த முடியா வீரராக இன்று வரை ஜொலித்து வருகிறார்.