இந்திய அணியில் காயமடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், இப்போது நிதிஷ் குமார் ரெட்டி தொடரிலிருந்தே விலகும் முழங்கால் காயத்திற்கு ஆட்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பும்ரா காய அச்சுறுத்தலில் இருக்கிறார். மனித சாத்தியங்களை மீறி பணியாற்றும் சிராஜ் எப்படி உடல் தகுதியைத் தக்க வைக்கிறார்? போன்ற கேள்விகள் எழ கம்பீரின் பயிற்சிக் காலம் குறித்த கடும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
கருண் நாயர் வெறும் ஹைப் என்று தெரிந்து விட்டது, என்பதோடு சர்பராஸ் கானை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் நோக்கம் தவிர கருண் நாயருக்குக் கொடுத்த வாய்ப்பில் பெரிதாக எந்த ஒரு நம்பிக்கையும் தெரியவில்லை.
ஞாயிறன்று நிதிஷ் குமார் ரெட்டி உடற்பயிற்சி நிலையத்தில் முழங்கால் காயமடைந்தார். லிகமண்ட் சேதம் ஏற்பட்டுள்ளது, எதற்காக இத்தனை கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள கம்பீர் அனுமதிக்க வேண்டும்? ஏற்கெனவே அர்ஸ்தீப் சிங் காயமடைந்தது எப்படி எனில் பயிற்சியில் சாய் சுதர்ஷன் அடித்த பந்தை பீல்ட் செய்ய முயன்ற போது காயமடைந்துள்ளார்.
வலைப்பயிற்சி என்பது ஒரு வார்ம் – அப் தான், மற்றபடி பேட்டர்கள், பவுலர்கள் தங்கள் பிரச்சனைகளை பயிற்சியாளர்கள் உதவியுடன் தீர்த்துக் கொள்ளும் இடமாகும். அது மேட்ச் அல்ல, பிறகு எப்படி காயமடைகிறார்கள். இவ்வளவு கறாரான பயிற்சி முறைகள் ஏன்?
ஒரு முறை தோனி கேப்டன்சியில் இங்கிலாந்து சென்ற போதும் இப்படித்தான் ஜாகீர் கான் உள்ளிட்ட பிரதான பவுலர்கள் காயமடைய கடைசியில் பார்ம் இல்லாத ஆர்.பிசிங், கர்நாடகாவிலிருந்து வினய் குமாரையெல்லாம் அழைத்து வந்து அணியில் சேர்க்க வேண்டிய நிலை ஆயிற்று இதனால் தோனி 4-0 என்று உதை வாங்கினார்.
இப்போது தொடர் காயங்களினால் அன்ஷுல் காம்போஜ் என்ற வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், அவர் மேட்ச் ஃபிட்டா என்பது இனிதான் தெரியவரும். ஏற்கெனவே இருந்த ஆஸ்திரேலியாவில் நன்றாக வீசிய ஹர்ஷித் ராணாவை வீட்டுக்கு அனுப்பியது ஏன்? தொடரை இழக்கும் நிலையில் உள்ள வாழ்வா சாவா போட்டிக்காக வீரர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் கம்பீர் காயத்திற்கு வீரர்களை காவு கொடுக்கும் வேலையச் செய்து வருகிறார்.
ஆகாஷ் சோப்ரா என்ன நடக்கிறது அங்கே என்று எழுப்பும் கேள்விகள் நியாயமானதே. ஹர்ஷித் ராணாவை அனுப்பிவிட்டு காம்போஜை ஏன் சேர்க்க வேண்டும்? எந்த ஒரு தெளிவும் இல்லை என்று சாடியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. , “ஹர்ஷித் ராணா இல்லை, காம்போஜ் வருகிறார் என்னதான் நடக்கிறது? ஒருவரை வைத்துக் கொள்வதும் அனுப்புவதுமான முடிவை எந்த அடிப்படையில் தீர்மானிக்கின்றனர்?
நிர்வாகத்தின் மனதில் அனைத்தும் இருக்கிறது, வெளியே பகிர்ந்து கொள்வதில்லை. வெளிப்படைத்தன்மை போய்க்கொண்டிருக்கிறது” என்று ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார்.