மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். உண்மையில், இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 4 நாட்கள் இருக்கும் போதும், கடைசி டெஸ்ட் போட்டி என்பது மிக முக்கியமான போட்டியாக இருக்கும்போதும் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடும் முனைப்புடன் வலது பாதத்தில் சரியான அடி வாங்கி ரத்தம் கொட்டியதோடு கால் உடனேயே பெரிய வீக்கம் கண்டது. இந்நிலையில், ஸ்கேன் எடுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, இந்தத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்குதான் தோனி போன்ற கேப்டன்கள் கடும் கோபத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில், காயமடைந்தால் நிச்சயம் பதிலி வீரர் அவரை அத்தனை விதத்திலும் இடமாற்றம் செய்ய முடியாது என்பதுதான் கிரிக்கெட்டின் வரலாற்று உண்மை.
ரிஷப் பந்த் நேற்று உண்மையில் நன்றாக ஆடிவந்தார். பொறுமையுடன் பொறுப்பாக ஆடினார். திடீரென அவர் மனதுக்குள் பூதம் புகுந்து விடுகிறது ஒன்று ரேம்ப் ஷாட் ஆடுகிறேன் என்று கீழே விழுகிறார், இல்லையெனில் ஸ்லாக் ஸ்வீப் ஆடுகிறேன் என்று ஆடுகிறார். ரிவர்ஸ் ஷாட் ஆடி ஏற்கெனவே ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் பீட்டன் ஆகியிருந்தார்.
அங்குதான் ஈகோவை விட வேண்டும். இன்றைக்கு மாட்டவில்லை என்றால், அந்த ஷாட்டுடன் மோதிக் கொண்டிருக்கக் கூடாது, எப்படியும் ஆடியே தீருவேன், அந்த ஷாட்டை கனெக்ட் செய்தே தீருவேன் என்று ஒருவித ஈகோ வந்து விட்டது ரிஷப் பந்த்துக்கு, அதற்குக் கொடுத்தவிலை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை. ஏற்கெனவே ஏகப்பட்ட காயங்களினால் தவித்து வரும் இந்திய அணிக்கு நாமும் சுமையாக மாறக் கூடாது என்ற பொறுப்புணர்வு எந்த ஒரு வீரருக்கும் வேண்டும்.
அந்தப் பந்தை அப்படி ஆட வேண்டிய அவசியம், அந்தத் தருணத்தில் அது தேவைப்படாத ஒரு ஷாட், ஒன்றுமில்லாத ஒரு நேர் புல்டாஸில் மட்டையில் பட்டுப் பாதத்தைத் தாக்கியது. நேர்மறையான ஒரு ஷாட்டை ஆடியிருந்தால் அது பவுண்டரிக்குக் கூட சென்றிருக்கலாம். இதுதான் பிரச்சினை, அந்த ஷாட்டை ஆடியே தீருவேன், கனெக்ட் செய்தே ஆக வேண்டும் என்று முன் கூட்டியே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இப்படிப்பட்ட முடிவில் தான் கொண்டு விடும்.
இதனால் அவரது சொந்த கரியரும் பாதிக்கப்படுவதோடு, இந்திய அணியையும் கைவிட்டு விட்டார் ரிஷப் பந்த். சிந்திக்காமல் செய்த தவற்றினால் அவர் இப்போது 7-8 வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது. இத்தனைக்கும் இந்திய அணியின் வைஸ் கேப்டன் ரிஷப் பந்த். அவருக்கு இன்னும் கூடுதல் பொறுப்புணர்வு தேவை என்பதே இந்தக் காயம் காட்டும் உண்மை. இப்போது, ஒருவேளை இஷான் கிஷன் மாற்று வீரராக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.