சென்னை: எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியின் 96-வது பதிப்பு வரும் நாளை (10-ம் தேதி) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. முதன்முறையாக இம்முறை மலேசிய நாட்டைச் சேர்ந்த மலேசியா ஜூனியர் நேஷனல் அணி கலந்துகொள்கிறது.
தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வேல்ஸ், இந்தியன் ஆர்மி, என்சிஓஇ (போபால்), மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஐஓசி, மலேசியா ஜூனியர் நேஷனல், கர்நாடகா, மத்திய நேரடி வரிகள் வாரியம் (டெல்லி),இந்திய விமான படை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 19-ம் தேதி நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் 20-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணி ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை பெறும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை அளிக்கப்பட உள்ளது. இயற்கை வளத்தை பெருக்கும் வகையில் இந்த தொடரில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலுக்கும் தலா 10 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எம்சிசியின் கவுரவச் செயலாளர் நிரஞ்சன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் விவேக் குமார் ரெட்டி, ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜீவ் ரெட்டி, முருகப்பா குழுமம் சார்பில் அருண் முருகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.