துபாய்: “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார்.
“கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் இடைமறித்தது. பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாட கூடாது என்ற குரல் எழுந்தது. இருப்பினும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் விளையாடின. இப்போது சூப்பர்-4 சுற்றிலும் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்தப் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தான் செய்தியாளர்களை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார்.
அப்போது, “எப்போதும் அணிக்கு வெளியே பேசப்படும் குரல்களை கேட்காமல் தவிர்ப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், என்னிடம் அதற்கு ஒரு மந்திரம் உள்ளது. அது என்னவென்றால் அறையின் கதவை அடைத்து, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தூங்குவதுதான். அதுதான் இந்த பேச்சுகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி.
இதை சொல்வது எளிது. ஆனால், செய்வதுதான் கடினம். ஏனெனில், நாம் அதிகளவில் நண்பர்களை சந்திப்போம், இரவு உணவுக்கு வெளியில் செல்வோம். நம்மை சுற்றியுள்ள வீரர்களும் அதை பார்க்க விரும்புவார்கள். இது மிக கடினம். ஆனால், மனம் சொல்வதை கேட்பதா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை அணி வீரர்களிடம் நான் கூறியுள்ளேன்.
இந்தத் தொடரில் அவர்களுக்கு (பாகிஸ்தான்) எதிராக நாங்கள் சிறந்த ஆட்டம் ஆடி வெற்றி பெற்றோம். ஆனால், அது போதாது. நாளைய போட்டியில் நாங்கள் மீண்டும் அடிப்படையில் இருந்து அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும். எங்களுக்கு எப்போதுமே தேசத்தின் ஆதரவு உள்ளது. அது இந்த ஆட்டத்திலும் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
சுமார் 12 நிமிடங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒரே ஒருமுறை கூட ‘பாகிஸ்தான்’ என சூர்யகுமார் யாதவ் எங்கும் குறிப்பிட்டு பேசவில்லை. கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸின் போதும், வெற்றிக்கு பிறகும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதை பாகிஸ்தான் தரப்பு விவாத பொருளாக்கியது.