இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாமல் போனதால் தன் மகன் அபிமன்யூ ஈஸ்வரன் மனச்சோர்வடைந்து விட்டதாக அவரது தந்தை அணித்தேர்வுக்குழு மீது சாடல் தொடுத்துள்ளார்.
சில வீரர்கள் ஐபிஎல் ஆட்டங்களை வைத்து என் மகனைத் தாண்டி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விடுகின்றனர், என் மகன் பரிசீலிக்கப்படமால் போய் விட்டான், இது நியாயமற்றது என்கிறார் அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன்.
ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “என் மகன் அபிமன்யூ மனச்சோர்வில் இருக்கிறான். இப்படித்தான் நடக்கும். ஐபிஎல் ஆட்டங்களை வைத்து சில வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கின்றனர். நீண்ட நாள் வடிவத்தில் ஐபிஎல் ஆட்டத்திறனை கணக்கில் எடுத்துக் கொள்வதா? ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் ஆடும் ஆட்டங்கள்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற அளவுகோலாக இருக்க வேண்டும்.” என்று சாடினார்.
அபிமன்யூ ஈஸ்வரன் டெஸ்ட் அணி சாத்தியங்களுக்குள் 2022ம் ஆண்டு பங்களாதேஷ் டூரின் போதே வந்து விட்டார். ஆனால் அதன் பிறகு 15 வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாகி விட்டனர். கடைசியாக அன்ஷுல் காம்போஜ் அறிமுகமானார்.
பார்டர் -கவாஸ்கர் டிராபியிலும் அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் இருந்தார், ஆனால் டெஸ்ட் வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தை தன் மகன் இந்திய அணியில் இணைந்து இன்னும் அறிமுகமாகாத நாட்களை எண்ணி வருகிறார். துலீப் டிராபி, இரானி டிராபி அணிகளில் இல்லாத கருண் நாயரை எப்படி தேர்வு செய்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.
“என் மகன் அணியில் இணைந்து இன்னும் அறிமுகமாகாத நாட்களை மட்டும் நான் எண்ணவில்லை, ஆண்டுகளைக் கணக்கிட்டு வருகிறேன். ஒரு வீரரின் வேலை என்ன ரன்களை எடுக்க வேண்டும். அபிமன்யூ அதைச் செய்திருக்கிறானே. ஆஸ்திரேலியா பயணத்தில் இரண்டு இந்தியா ஏ மேட்சில் என் மகன் சரியாக ஆடவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இது நியாயமானதுதான்.
ஆனால் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முந்தைய போட்டிகளில் அபிமன்யூ நன்றாக ரன்களை எடுத்த போது கருண் நாயர் அணியிலேயே இல்லையே. கருண் நாயரை துலீப், இரானி கோப்பை அணிகளில் தேர்வு செய்யவில்லை. பெர்பார்மன்ஸ் பற்றிப் பேசினால் கடந்த ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை அபிமன்யூ ஈஸ்வரன் 864 ரன்களை எடுத்திருக்கிறான்.” என்கிறார் ரங்கநாதன் ஈஸ்வரன்.
இதுவரை அபிமன்யூ ஈஸ்வரன் பெங்காலுக்காக 103 முதல் தரப் போட்டிகளில் 7,841 ரன்களை 48.70 என்ற சராசரியில் 31 அரைசதங்கள், 27 சதங்கள் என்று எடுத்துள்ளார்.
அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தைக்கு இத்தனை ஆற்றாமை இருந்தால் காரணமின்றி அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ச்ர்பராஸ் கானுக்கும் அவரது தந்தைக்கும் எத்தனை வேதனை இருக்குமென்பதை நாம் யூகிக்க முடிகிறது.