ஷுப்மன் கில்லை ஒரு பிராண்ட் ஆக உயர்த்த வேண்டும் என்று ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரோ 2 போட்டிகளிலும் ஒன்றும் தேறவில்லை. இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஜெய்ஸ்வாலும் அது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
23 சர்வதேச டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால் 723 ரன்கள் 164% ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார். ஒரு சதம் 5 அரைசதங்கள் என்று நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.
ஆனால் தான் ஆசியக் கோப்பை தொடரில் இல்லாதது, தன்னைப் பாதிக்கவில்லை என்று கூறும் ஜெய்ஸ்வால், “முடிவுகள் அணிச்சேர்க்கையைப் பொறுத்து எடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் தேர்வுக்குழுவினர் கையில் உள்ளது. நான் என்னால் செய்ய முடிவதைச் செய்வேன்.
என் நேரம் வரும்போது அனைத்தும் சரியான இடத்தில் நிலைபெறும். நான் என் பேட்டிங்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். கடினமாக உழைக்க வேண்டியதுதான். மற்றவை தானாக நடக்கும்.” என்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஜெய்ஸ்வாலுக்கு இப்போதைக்கு டெஸ்ட் போட்டிகலில் மட்டுமே இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது ‘கேலிக்கூத்து’ என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகிறார்.
அவர் கூறும்போது, “யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று கிரிக்கெட் வடிவத்திற்கும் பொருத்தமான வீரர். இருப்பினும் அவர் ஒரே வடிவத்தில் மட்டும்தான் ஆடுகிறார். இது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது. இது ஏறக்குறைய அநீதி என்றே கூறுவேன். இப்போதைக்கு உண்மை என்னவெனில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார்.
அவர் நிச்சயம் அதிலும் ரன்களைக் குவிப்பார் என்று உறுதிபட நம்புகிறேன். ஏனெனில், அவர் அப்படிப்பட்ட ஆட்டக்காரர். ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் அணியுடன் செல்வார் என்று எதிர்பார்க்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் ஆடுவார் என்று நம்புகிறேன்” என்றார்.