சென்னை: மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
“ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஒரு அணியில் உள்ள வீரர், தன்னை தக்க வைக்கலாமா அல்லது விடுவிக்கலாமா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயம் அது குறித்து தெளிவு படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் எதுவும் என் கையில் இல்லை. நான் அது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன்.
நானும், சஞ்சு சாம்சனும் அணி மாறுகின்றோம் என யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதை நாங்கள் சொல்லவில்லை. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடி உள்ளேன். முதல் சீசன் முடிந்ததும் அந்த அணியின் சிஇஓ எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதில் நான் தக்கவைப்பட்டதாக சொல்லி இருந்தார்.
சீசன் முடிந்த பிறகு வீரர்களை தக்கவைக்கப்பட்ட தகவலை அணிகள்தான் தெரிவிக்க வேண்டும். ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்பாக அது குறித்த தகவலை வீரர்கள் வசம் அணிகள் தெரிவிக்கும். அதே நேரத்தில் ஒரு வீரர் டிரேட் செய்யப்பட்டால் அது ஆஃப் சீசனில் முடிவு செய்யப்படும்” என அஸ்வின் கூறியுள்ளார்.