புதுடெல்லி: உலக விளையாட்டு போட்டியின் வில்வித்தைப் பிரிவில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வில்வித்தை பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் 145-147 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க வீரர் கர்டிஸ் லீ பிராட்னாக்சிடம் தோல்வி கண்டார். இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிஷப் யாதவ், சக நாட்டவரான அபிஷேக் வர்மாவுடன் மோதினார். இதில் ரிஷப் 149-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
ஆசிய குத்துச்சண்டை இந்தியாவுக்கு 2 தங்கம்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர்.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நிஷா (54 கிலோ) மற்றும் முஸ்கான் (57 கிலோ) தங்களது எடைப் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதித்தனர். மேலும் இந்தப் போட்டியில் பங்கேற்ற 5 இந்திய வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கங்களைத் தட்டிச் சென்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் களமிறங்கிய 10 வீராங்கனைகளில், 9 பேர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.