புதுடெல்லி: அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் உலக மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் அமன் ஷெராவத் பங்கேற்கவிருந்தார். போட்டிக்கு முன்னதாக அவரது எடை சரிபார்க்கப்பட்டபோது அவர் 1.7 கிலோகிராம் எடை கூடுதலாக இருந்தார். இதையடுத்து போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமன் தனது எடையை 57 கிலோவுக்குள் வைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அவரது எடை திடீரென அதிகரித்துள்ளது ஆச்சரியமான செய்தியாக இருந்தது. உண்மையில் இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை. கூடுதல் எடை வந்தது எப்படி என்பது எங்களுக்குப் புரியவில்லை” என்றார். 22 வயதாகும் அமன் ஷெராவத், இந்தப் போட்டியில் பதக்கம் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்தியக் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.