புதுடெல்லி: பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் 10-வது இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை முன்னேறியிருந்த இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென், 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், 54,442 புள்ளிகள் பெற்றுள்ளார். ஹெச்.எஸ்.பிரனாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 40,366 புள்ளிகளுடன் 33-வது இடத்தில் உள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 17 வயதான இந்தியாவின் உன்னதி ஹூடா 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்தார். தரவரிசையில் உன்னதி ஹூடா 31-வது அடைவது இதுவே முதன்முறையாகும். கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன் தொடரின் கால் இறுதி சுற்றில் உன்னதி ஹூடா, இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான பி.வி.சிந்துவை வீழ்த்தியிருந்தார்.
பி.வி.சிந்து தரவரிசையில் 15-வது இடத்தில் தொடர்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-வது இடத்தில் தொடர்கிறது. தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி இரு இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளது.
மக்காவ் ஓபன் பாட்மிண்டனில் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி: மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் லோ ஹாங், சியோங் ஜோடியை வீழ்த்தியது.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 20-22, 15-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லின் ஜியோவோ மின், பெங்க யு வெய் ஜோடியிடம் போராடி தோல்வி அடைந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-11, 21-13 என்ற செட் கணக்கில் அஜர்பைஜானின் கெய்ஷா பாத்திமா அஸ்ஸாராவையும், தஷ்னிம் மிர் 21-14, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் டிடாப்ரான் கிளீபியீசனையும் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.