டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதலில் டிரினிடாட் மற்றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
டிரினிடாட் மற்றும் டோபாகோவை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 88.16 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.38 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் தாம்ப்சன் கர்திஸ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இந்திய நட்சத்திரமான நீரஜ் சோப்ரா 84.03 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார். 27 வயதான அவர், தனது 2-வது முயற்சியில் இந்த தூரத்தை எட்டியிருந்தார். 3-வது வாய்ப்பிலும் 5-வது வாய்ப்பிலும் ஃபவுல் செய்தார். விதிமுறைகளின்படி 5 வாய்ப்புகள் முடிந்த பிறகு முதல் 6 இடங்களுக்குள் இருக்கும் வீரர்கள் மட்டுமே கடைசி வாய்ப்பில் பங்கேற்க முடியும். இதனால் நீரஜ் சோப்ரா கடைசி வாய்ப்பை பெற முடியாமல் போனது.
அந்த வகையில் 5-வது வாய்ப்பு முடிவடைந்ததும் நீரஜ் சோப்ரா வெளியேற்றப்பட்டார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் தனது முதல் வாய்ப்பில் 86.27 மீட்டர் தூரம் எறிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கடைசி வாய்ப்பு வரை சென்ற அவரால் அதற்கு மேல் ஈட்டியை செலுத்த முடியாமல் போனது. முடிவில் சச்சின் யாதவ் 4-வது இடத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.
ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (82.75) 10-வது இடம் பிடித்தார். அவர், 4-வது வாய்ப்புடன் வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி நட்சத்திரமான ஜூலியன் வெபர் 86.11 மீட்டருடன் 5-வது இடம் பிடித்தார்.