டோக்கியோ: உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 198 நாடுகளை சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 49 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் 19 பேர் கொண்ட குழுவினர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாளில் 35 கிலோமீட்டர் நடைப் போட்டி நடைபெற்றது. ஆடவர் 35 கிலோ மீட்டர் பிரிவில் இந்தியாவின் சார்பில் சந்தீப் குமார் பங்கேற்றார். போட்டியின் முடிவில் அவர் 23-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 15 விநாடிகளில் கடந்தார்.
அதேபோல் மகளிர் 35 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி கலந்துகொண்டு 24-வது இடம் பிடித்தார். பந்தய தூரத்தை பிரியங்கா கோஸ்வாமி 3 மணி நேரம் 5 நிமிடங்கள் 58 விநாடிகளில் கடந்தார்.
அதேபோல் மகளிர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பூஜா பங்கேற்றார். ஆனால் அவர் 11-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். வரும் 18-ம் தேதி நடைபெறும் 800 மீட்டர் ஓட்டத்திலும் பூஜா பங்கேற்கவுள்ளார்.