ஆஸ்திரேலிய லெஜண்ட் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் சர்ச்சைக்குரிய விஷயங்கள்தான் வெளியே வந்தன. அதில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் விரேந்திர சேவாக் பகிர்ந்து கொண்டது.
ஊடகம் ஒன்றில் இது தொடர்பாக பகிர்ந்து கொண்ட சேவாக், ஒருமுறை பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடன் கடுமையான வாத, விவாதங்கள் ஏற்பட்டதைக் குறிப்பிட்டார். சேவாகின் ஆட்டம் ஒரு தனி ரகம். கால்களை பெரிய அளவில் நகர்த்தாவிட்டாலும் பந்தின் லெந்த்தைக் கணித்து கண், கை ஒருங்கிணைவில் அற்புதமான ஷாட்களை ஆடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சேவாக்.
ஆனால், கிரெக் சாப்பல் கால்களை நகர்த்தி ஆடுவதில் கவனம் தேவை என்று கருதுபவர். அப்படி ஒரு அட்வைஸை கிரெக் சாப்பல் கூற சேவாக், இதோ பாருங்க நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கெனவே 6,000 ரன்களை அடித்திருக்கிறேன், என்னுடைய சராசரி 50 என்று காட்டமாக பதிலடி கொடுத்ததைப் பகிர்ந்து கொண்டார்.
“ரன்களை எடுக்க வேண்டும் இல்லையெனில் உன்னை டீமை விட்டு எடுத்து விடுவேன்” என்று சேவாகிடம் ஒருமுறை கோச் கிரெக் சாப்பல் கூறியிருக்கிறார். அந்தப் போட்டியில் 184 ரன்களை எடுத்தார் சேவாக். எடுத்ததோடு இல்லாமல் கேப்டன் ராகுல் திராவிடை அழைத்து, “உங்கள் கோச்சை என்னை நெருங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று கண்டிப்புடன் கூறியதையும் பகிர்ந்து கொண்டார்.
சாப்பல் காலக்கட்டம் 2007 உலகக் கோப்பை முதல் சுற்று வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால் கண்டிப்பான ஒரு கோச் இந்திய அணிக்கு ஒத்து வராது. சீனியர் வீரர்களையெல்லாம் அவர் பகைத்துக் கொண்டார். மேலும், ஓய்வறைக்குள் இருக்க வேண்டிய விஷயங்களையெல்லாம் மீடியாவிடம் கசியவிட்டார். இதனால் கடும் சர்ச்சைகள் கிளம்பின.
குறிப்பாக கிரெக் சாப்பல் கங்குலியைக் கையாண்ட விதம் மிக மோசமாக இருந்தது. அணியில் அனைவரிடத்திலும் ஒரு பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கிக் கொண்டிருந்தார் சாப்பல்.
ஆனால் அதே காலக்கட்டத்தில்தான் 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி சேசிங்கில் வென்று இன்று வரை அந்த உலக சாதனை முறியடிக்கப்படவில்லை.
அவர் செய்த பெரிய தவறு ஆஸ்திரேலிய பாணி கடினமான போட்டி நிறைந்த கிரிக்கெட் வீரர்களாக மாற்றப்பார்த்தார். ஆனால், அதைச் செய்த விதம் கொஞ்சம் கண்டிப்புடன் அமைந்தது. கங்குலி கூட ஒருமுறை கிரெக் சாப்பல் பயிற்சி பற்றிக் கூறும்போது, “நமக்குத்தேவை பயிற்சியாளர்தான் கல்லூரி பேராசிரியர் அல்ல” என்று கிண்டலாகக் கூறினார். சுனில் கவாஸ்கர், ஏன் கிரெக் சாப்பலின் மூத்த சகோதரர் இயன் சாப்பல் போன்றோரே எவ்வளவோ எச்சரித்தும் கங்குலி அதையெல்லாம் புறக்கணித்து கிரெக் சாப்பலை கோச்சாக நியமிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பெரும் துன்பங்களை அனுபவித்தார்.