துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த சூழலில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் அபிஷேக் சர்மா வழக்கம் போலவே பேட்டிங்கில் அதிரடி காட்டினார். அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து, இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பந்து வீச்சில் வெளியேறினார். 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து 66 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன், 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா, 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 34 பந்துகளில் 49 ரன்களும், அக்சர் படேல் 15 பந்துகளில் 21 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 203 ரன்கள் தேவை. நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ஒரு 200+ ரன்களை எடுப்பது இதுவே முதல் முறை. அதை இந்தியா செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் பும்ரா மற்றும் துபே விளையாடவில்லை. அவர்களுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா விளையாடுகின்றன.