லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.
இதில் 6-4, 5-7, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். 22 வயதான அல்கராஸ் 2023 மற்றும் 2024-ல் விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். நடப்பு சாம்பியனான அவர் இப்போது மீண்டும் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்புடன் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னரும் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அல்கராஸ் உடன் சின்னர் விளையாடுகிறார். கடந்த மாதம் இவர்கள் இருவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் விளையாடி இருந்தனர்.