முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எளிதில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தது.
“பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் எங்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகள சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். சுயாஷ் சர்மா சிறப்பாக விளாடியாடினார். அவரது லைன் மற்றும் லெந்த் அருமை.
ஸ்டம்புகளை டார்கெட் செய்வதுதான் சுயாஷின் பணி. ஒரு கேப்டனாக அவரை நான் குழப்ப விரும்பவில்லை. அவருக்கு ஐடியா கொடுப்பது மட்டுமே என் பணி. அவர் ரன் கொடுத்தாலும் பரவா இல்லை. அவரது கூக்லிகளை ஆடுவது மிகவும் சிரமம்.
எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் விளையாடுவதை டக்-அவுட்டில் இருந்து பார்ப்பது கண்களுக்கு விருந்து. அணிக்கு சிறந்த தொடக்கத்தை அவர் வழங்குகிறார்.
ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் என்று மட்டுமல்லாது நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் அதை எங்களது ஹோம் கிரவுண்ட் போன்ற உணர்வை ரசிகர்களும், ஆதரவாளர்களும் அளித்து வருகின்றனர். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். எங்களுக்கு உங்களது தொடர் ஆதரவு வேண்டும். இன்னும் ஒரு ஆட்டம்தான்; நாம சேர்ந்து கொண்டாடுவோம்” என கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தார்.
2009, 2011 மற்றும் 2016 சீசனை அடுத்து நான்காவது முறையாக நடப்பு சீசனில் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது. 2011 சீசன் முதல் பிளே ஆஃப் சுற்று முறையில் ஐபிஎல் விளையாடப்படுகிறது. அந்த வகையில் இதற்கு முந்தைய 14 சீசன்களில் குவாலிபையர் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணி 11 முறை பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.