மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னை ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனியை இந்திய அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக நியமிக்க அழைப்பு விடுத்ததாக எழுந்த செய்திகளை அடுத்து முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடும் கிண்டலடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் தோனியை நம்பிக்கை ஆலோசகராக நியமிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக செய்திகள் உலா வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து முன்னாள் வீரரும் மேற்கு வங்க எம்.எல்.ஏவுமான மனோஜ் திவாரி கிண்டலாக, “ஓஹோ! போனை எடுத்தாரா தோனி? போனில் அவரைப் பிடிப்பது மிகக்கடினம்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பிராண்ட் தோனிதான். சிஎஸ்கே அவரது பிராண்ட் வேல்யூவை மிகக்கச்சிதமாக படிப்படியாக உயர்த்தியபடியே வந்தது, 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடினாலும் எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் அதனால் அவரை ‘கூல்’ என்று அழைத்தனர்.
எதிரணி 350 ரன்களை அடித்தாலோ டி20-யில் எதிரணி 220 ரன்களை அடித்தாலோ அந்த இலக்கை விரட்டுவதில் பெரிய ஆர்வமெல்லாம் தோனி காட்ட மாட்டார் என்பதை நாம் புள்ளி விவரங்கள் வழி காண முடியும். வேறு வீரர்கள் சேசிங் செய்து கொடுத்து வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்தினால் பினிஷிங் டச் கொடுத்து மேட்சை முடித்துக் கொடுப்பார், இதனாலேயே அவருக்கு ‘கிரேட் பினிஷர்’ என்ற பெயர் கிட்டியது.
தோனி தன் மனத்தில் எது நிர்ணயிக்கக் கூடிய இலக்கு, எது விரட்டக்கூடிய இலக்கு என்பதை முதலிலேயே ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்வார். அதற்கு மாறாக முடிவுகள் செல்லும் போது அவர் பெரிதாக வரிந்து கட்டிக்கொண்டு வெற்றி பெற்றே தீருவேன் என்றெல்லாம் ஆடுபவர் அல்ல. அவர் எப்படி ஆலோசகராகவோ, பயிற்சியாளராகவோ வெற்றிகரமான ஒருவராக இருக்க முடியும்.
மேலும் முயற்சி செய்து பீல்ட் செய்பவர்களையே தோனி அப்படி எல்லாம் பீல்டிங் செய்து காயமடைந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கும் டைப். இதை ஜடேஜாவே ஒருமுறை வெளிப்படையாகச் சொன்னதுண்டு. மேலும் அவரே டைவ் அடித்து கேட்ச்களை எடுத்தது கடைசியாக எப்போது என்பது நம் நினைவில் இல்லை. விக்கெட் கீப்பிங் பயிற்சியையே அவர் வேண்டாம் என்று நிறுத்தி விட்டதாக சமீபத்தில் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூட தெரிவித்திருந்தார். எனவே அவர் அணியில் ஆலோசகராக என்ன உத்வேகத்தை அளித்து விட முடியும் என்பது கேள்விக்குறியே என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்து வருகின்றன.
இதே கேள்வியை மனோஜ் திவாரியிடம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கேட்ட போது மனோஜ் திவாரி கூறியதாவது:
பிசிசிஐ எப்படி அவரை தொடர்பு கொண்டது, போன் மூலமா? அவர் போனை எடுத்தாரா? ஏனெனில் அவரை போன் மூலம் பிடிப்பது மிகவும் கடினம். மெசேஜ் செய்தாலும் அதற்குப் பதில் அளிப்பதும் அரிதே. பல வீரர்கள் இதைப் பகிர்ந்துள்ளனர். எனவே பிசிசிஐ செய்தி அனுப்பியிருந்தால் அதை அவர் படித்தாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. நமக்கு எதுவும் தெரியாது.
முதலில் இந்த ரோலை அவர் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதே ஒரு கேள்வி. அவரால் என்ன தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பது பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. அவரது அனுபவம் நிச்சயம் உதவிகரமாகவே இருக்கும். இன்று வரும் புதிய வீரர்கள் அவருக்கு நிறைய மரியாதை கொடுப்பார்கள். கம்பீரும் தோனியும் இணைவது பார்க்கத் தகுந்ததாக இருக்கும். இவ்வாறு கூறினார் மனோஜ் திவாரி.
ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோனியை மறைமுகமாகவோ, இடக்கரடக்கலாகவோ கம்பீர் விமர்சித்து வந்துள்ளார். குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியில் தோனியின் அந்த கடைசி சிக்ஸ், அவரது இன்னிங்ஸ் ஆகியவற்றை நினைவுச்சின்னமாக்க முயற்சி செய்யும் போதெல்லாம் அவர் தான் அடித்த 97 என்ன இன்னிங்ஸ் இல்லையா? அதுவும் தான் பங்களிப்பு செய்தது என்ற ரீதியில் முசுட்டுத்தனமாக பதிவிட்டதை நாம் பார்த்திருக்கிறோம். கம்பீர் நிச்சயம் தோனி வருவதை விரும்ப மாட்டார் என்றே விஷயம் தெரிந்த கிரிக்கெட் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.