மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர் உரிமையை ரூ.579 கோடிக்கு பெற்றுள்ளது அப்போலோ டயர்ஸ் நிறுவனம். சுமார் இரண்டரை ஆண்டு காலத்துக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்.
இந்த காலகட்டத்தில் சுமார் 121 இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி நடத்தும் தொடரில் 21 போட்டிகள் என இந்தியா விளையாடுகிறது. கேன்வா மற்றும் ஜே.கே சிமெண்ட் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்றது. இருப்பினும் அதில் அதிக தொகையை கோரியிருந்த அப்போலோ டயர்ஸ் நிறுவனம், ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இதன்படி பார்த்தால் இந்திய அணி ஆடும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் சுமார் 4.77 கோடி ரூபாய் வரை அப்போலோ டயர்ஸ் செலவிடும் என தெரிகிறது.
வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் லோகோ இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் இடம்பெறும் என பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ‘ட்ரீம் 11’ நிறுவனம் வெளியேறிய நிலையில் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் அதை இப்போது பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடர் முதல் அப்போலோ டயர்ஸ் நிறுவனம், இந்திய அணியின் ஸ்பான்சராக செயல்படும் என தெரிகிறது. இந்த தொடர் வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவித்துள்ளது.