ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணியின் ரிஷப் பந்த் கால் எலும்பு முறிவுடன் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸர் அடித்தும், அரைசதம் அடித்தும் பெரிய அளவில் இந்திய அணிக்கு அளித்த ஊக்கம் பவுலர்கள் மனதில் ஏறவில்லை. எதற்காகப் பந்து வீசுகிறோம் என்று தெரியாமலேயே வீசினர். பும்ரா உட்பட அனைவரும் சொதப்பலோ சொதப்பல். கில்லின் களவியூகம் பார்க்கச் சகிக்கவில்லை. ரன் தடுப்பு களவியூகம் அமைத்து இங்கிலாந்து தொடக்க வீரர்களை செட்டில் ஆக விட்டார்.
ஜஸ்பிரித் பும்ராவின் பந்தில் ஒன்றுமே இல்லை, ஒன்றிரண்டு பந்துகள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி டக்கெட்டை பீட் செய்ததோடு சரி, மற்றபடி எந்த ஒரு உத்தியும் இல்லாத அரைகுறை கால் நகர்த்தல்களுடன் அசிங்கமாக ஆடிவரும் கிராலியையும் பும்ராவினால் வீழ்த்த முடியவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்து பாஸ்பால் அதிரடியெல்லாம் ஆடவில்லை, ஆனால் அப்படி ஆடுங்கள், ஆடுங்கள் என்று இந்தியப் பந்து வீச்சு அவர்களை வலியுறுத்தியது என்பதுதான் அதிர்ச்சியளித்தது. அதனால்தான் 46 ஓவர்களில் 225 ரன்களை எடுத்துள்ளனர், இதனால் இந்த டெஸ்ட்டை இந்தியா தோற்பதோடு தொடரையும் இழக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.
சிராஜ் புதிய பந்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அன்ஷுல் காம்போஜிடம் கொண்டு போய் அதிரடி இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்கு எதிராக ஷுப்மன் கில் கொடுக்கிறார் என்றால் சிராஜ் என்ற சீனியர் பவுலர், அதுவும் தன் இருதயம் வெடிக்குமாறு கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அயராது வீசியுள்ளார், அவர் லீட் பவுலர் இல்லாமல் எங்கிருந்து வந்தார் இந்த அன்ஷுல் காம்போஜ்.
ரிக்கி பாண்டிங் அன்ஷுல் காம்போஜிடம் புதிய பந்தை கொடுத்ததை கடுமையாகச் சாடியுள்ளார், “உத்தி ரீதியாக இந்தியா ஒன்றுமில்லாமல் இருந்தனர். காம்போஜிடம் புதிய பந்தைக் கொடுத்தது ஆரம்பத்திலிருந்தே எனக்குப் பிடிக்கவில்லை. டக்கெட் அடித்த முதல் 6 பவுண்டரிகளில் 5 பவுண்டரிகள் லெக் திசையில் வந்ததுதான், ஆஃப் திசையில் பீல்டை வைத்து பந்து வீசச்சொன்னால் லெக்திசையில் வீசி 3 பவுண்டரிகளைத் தாரை வார்த்தார் அன்ஷுல்.” என்று கடுமையாகத் தாக்கியுள்ளார் பாண்டிங்..
அவர் மேலும் கில் கேப்டன்சியை விமர்சிக்கும் போது, பும்ராவை ஆண்டர்சன் முனையில் இருந்து வீசச்சொன்னது பெரிய தவறு. ஏனெனில் எதிர்முனையான ஸ்டாதம் முனையிலிருந்துதான் அதிக விக்கெட்டுகள் நேற்று விழுந்திருக்கின்றன, ஸ்டோக்ஸ் அங்கிருந்துதான் வீசினார், அதே முனையிலிருந்துதானே பும்ரா வீச வேண்டும், என்ன ஐடியாவில் கில் அவரை ஆண்டர்சன் முனையிலிருந்து வீசச்சொன்னார் என்பது புரியவில்லை, முற்றிலும் தவறான கேப்டன்சி என்று சாடினார்.
முதல் ஸ்பெல் படுமோசமாக அமைந்தது. இந்தியா 358 ரன்களை மட்டுமே எடுக்க 166 ரன்களை டக்கெட்டும், கிராலியுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனர். எல்லாவற்றையும் விட படுமோசம் ஷர்துல் தாக்கூர், அவர் பேட்டிங்கில் தன்னை அணியில் தக்கவைக்க முடியாது, அவர் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் முடியும். கடந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி வீச விக்கெட் கீப்பரை முன்னால் வரச் செய்து வீசியது பலனளித்தது, இந்த முறை அந்த முயற்சி எதையும் கில் செய்யவே இல்லை. என்ன ஆயிற்று அவருக்கு என்று புரியவில்லை. தாக்கூர் சுத்த வேஸ்ட். பவுலிங் வேஸ்ட் அவர்.
ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பந்து வீசும் போது ஸ்டம்புகளுக்கு அருகே வந்து வீசி பந்தை உள்ளேயும் வெளியேயும் அட்டகாசமாக ஸ்விங் செய்து படுத்தினர், ஆர்ச்சர் அந்த லெந்த்திலிருந்து பந்தை எகிறவும் செய்யும் போது பந்து உடலுக்கு நேராக வருகிறது, மிகக் கடினம். ஆனால் இந்தியப் பந்து வீச்சு களவியூகத்திற்கு தக்கவாறு இல்லாமல் ஆஃப் திசையில் நிறுத்தினால் லெக் ஸ்டம்பிலும் லெக் திசையில் வலுப்படுத்தினால் ஆஃப் ஸ்டம்பில் ஷார்ட் பிட்சுமாக வீசி பவுண்டரிகளை வாரி வழங்கினர். இதனால் என்ன ஆயிற்று இந்த டெஸ்ட்டை இழந்து தொடரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்துக்கு இந்திய பவுலிங் வழங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
இன்று இந்த எண்ணத்தை மாற்றுமாறு வீசி அடுத்த 100-125 ரன்களுக்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் இந்தப் போட்டியில் இந்திய அணி தப்ப முடியும்.