சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கு கோலி மற்றும் ரோஹித் போலவே சிறந்த பங்களிப்பை புஜாரா வழங்கியுள்ள போதும் லைம்லைட்டுக்குள் அவர் வரவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஸ்வின் கூறியுள்ளார்.
அண்மையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்தார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்களை புஜாரா குவித்துள்ளார். அக்மார்க் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என அவரது ஆட்டத்தை ரசிகர்கள் போற்றுவது உண்டு. தடுப்பாட்டத்தில் கைதேர்ந்தவர்.
“இந்திய அணிக்கு புஜாரா அளித்த பங்களிப்பு கோலி மற்றும் ரோஹித்துக்கு இணையானது. அவர்களது பங்களிப்பு குறித்து பரவலாக பேசப்படுவது உண்டு. அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த அளவுக்கு கவனம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு குறைவு என சொல்லிவிட முடியாது.
மூன்றாவது பேட்ஸ்மேனாக அவர் களம் கண்டு விராட் கோலி அதிக ரன்கள் எடுக்க ஒரு கருவியாக உதவி உள்ளார். நீங்கள் நம்பினாலும், நம்பாமல் போனாலும் இதுதான் நிஜம்.
கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களுக்கு புஜாரா ஆட்டம் குறித்து தெரியும். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பார்த்தவர்களுக்கு அதில் வரும் ‘வொய்ட் வாக்கர்’ பாத்திரம் குறித்து தெரியும். நான் புஜாராவை ‘வொய்ட் வாக்கர்’ என சொல்கிறேன். அவர் நிதானமாக நடந்தாலும் ஒருபோதும் களத்தை விட்டு வெளியேறுவதில்லை” என அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.