புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிக்குத் தடை கோரிய மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஊர்வசி ஜெயின் உள்ளிட்ட சட்டக் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில், கிரிக்கெட் என்பது இரு நாடுகளுக்கு இடையே நட்பையும், இணக்கத்தையும் வெளிப்படுத்துவதாகும். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது படை வீரர்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான உறவினர்களின் மன உறுதியை குலைக்கும்.
இதனால் துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர், இந்தியா – பாகிஸ்தான் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால், தடை கோரும் மனுவை வெள்ளிக்கிழமை (இன்று) விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க என்ன அவசரம் உள்ளது? கிரிக்கெட் போட்டிதானே நடக்கட்டும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டிக்கு என்ன செய்ய முடியும்? என்று கேட்டு, முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.