லாகூர்: இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை பெறுவது சார்ந்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அவர்கள் வசம் கோப்பையை மோசின் நக்வி வழங்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
“இந்திய அணி நம்பர் 1 அணிதான். ஆனால், அவர்களின் செயல் மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. மோசின் நக்விதான் கோப்பையை வழங்குவார். அதை பெற மறுத்தால் அது அவர்களுக்கு தான் அவமதிப்பு.
நீங்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளீர்கள். ஆனால், ஏன் இந்த பிடிவாதம்? மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர். இதுவே ஐசிசி தொடராக இருந்து, அதில் ஜெய் ஷா வசமிருந்து பாகிஸ்தான் அணி கோப்பையை பெற முடியாது என தெரிவித்தால், அங்கு யார் மீது தவறு?” என பாசித் அலி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை சர்ச்சை: கடந்த செப்.28-ம் தேடி நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர்ந்து இந்திய அணி வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து பெற முடியாது என தெரிவித்தது. ‘நான்தான் கோப்பையை வழங்குவேன்’ என மோசின் நக்வி தெரிவித்தார். அதை இந்திய அணி ஏற்க மறுத்தது. இதையடுத்து மோசின் நக்வியின் அறிவுறுத்தலின் படி, அலுவலர் ஒருவர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார். இது சர்ச்சையானது.
இந்திய அணி கோப்பையே இல்லாமல் வெற்றியை கொண்டாடியது. இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும் பதக்கங்களையும் அவர் எடுத்துச் செல்ல முடியாது. விரைவில் அது இந்திய அணியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று நம்புகிறோம்.
வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் நாங்கள் பாகிஸ்தானின் மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம்” என்றார்
இந்த சூழலில் இந்திய அணிக்கு கோப்பை வேண்டுமானால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெற்றுக் கொள்ளலாம் என நக்வி தெரிவித்தார்.